இந்த நிலை தொடர்ந்தால் அவ்வளவு தான்… 2024ல் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தல் நடப்பது உறுதி ; திமுகவுக்கு வேலூர் இப்ராஹிம் வார்னிங்!!

Author: Babu Lakshmanan
6 October 2022, 6:27 pm
Quick Share

திண்டுக்கல் ; காஷ்மீருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தீவிரவாதம் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்ந்தால் 2024 நாடாளுமன்றத் தேர்தலோடு, தமிழக சட்டமன்ற தேர்தல் வருவதை யாராலும் தடுக்க முடியாது என பாஜக சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- 2024ல் பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த பணி தமிழகத்தில் செய்து வருகிறோம். இதன் ஒருபகுதியாக திருட்டு மாடலாக உள்ள திராவிட மாடலையும், அயோக்கியர்களின் கூடாரமாக உள்ள திமுக ஆட்சியை பற்றி மக்களிடம் எடுத்து சொல்லி வருகிறோம்.

சமீபத்தில் நடந்து முடிந்த கிராம சபை கூட்டங்களில் எதிர்த்து கேள்வி கேட்ட பொதுமக்களை அவமதிக்கும் விதமாக, அமைச்சர்கள் நடந்து கொண்டது வெட்கக்கேடானது. பொதுமக்களையும், பெண்களையும் கேவலமாக, கடுமையாக விமர்சிக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடுகளால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

அதனாலேயே அமைச்சர்களையும், கட்சி நிர்வாகிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் அடக்கி வாசிக்கும்படி எச்சரித்துள்ளார். யாரெல்லாம் எதிர்கேள்வி கேட்கிறார்களோ, அவர்களையெல்லாம்‌ அடக்குமுறைக்கு ஆளாக்குவது இவர்களது பழக்கம். ஜெயலலிதாவிடமே இந்த குணத்தை காண்பித்தவர்கள்.

தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தேதி போட்டோமா? என்று ஏளனம் செய்கின்றனர். வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத இவர்கள் பொதுமக்களை சந்திக்கும் போது, இவர்களை செருப்பால் அடிக்க கூட பொதுமக்கள் தயங்க மாட்டார்கள்.

இவர்கள் பாஜகவினருக்கு அறிவுரை சொல்ல தகுதியில்லாதவர்கள். இந்தியாவிலேயே அதிக நிதிகளை பெறும் இரண்டாவது மாநிலம் தமிழகமாக இருந்தும், மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சிக்கின்றனர். மோடி வந்து விடுவார் என பயம் காட்டி சிறுபான்மை மக்களிடம் வாக்குகளை பெறும் திமுக, அவர்களுக்கு ஏதாவது ஒரு நன்மையை செய்து உள்ளாரா..?. ஆனால், பாரத பிரதமர் நரேந்திர மோடி சிறுபான்மை மக்களுக்காக 5,123 கோடி ஒதுக்கி கல்வி, பெண்கள், பொருளாதாரம் என 14 நலத்திட்டங்கள் மூலம் உதவி செய்துள்ளார்.

மதம் என்பதைத் தாண்டி தேசம் என்கிற அளவில் அவர்கள் வளர வேண்டும் என்று மோடி நினைக்கிறார். ஆனால் சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் ஸ்டாலின் செயல்பாடு கண்டிக்க தக்கது.

சட்டவிரோதமாக பல்வேறு காரியங்கள் தமிழகத்தில் நடந்து வருகிறது. காஷ்மீருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தீவிரவாதம் அதிகரித்துள்ளது. இது தொடர்ந்தால் 2024 நாடாளுமன்றத் தேர்தலோடு, தமிழக சட்டமன்ற தேர்தல் வருவதை யாராலும் தடுக்க முடியாது.

பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இல்லாமல், தாக்குதலில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால் வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன், தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலும் நடப்பதை யாராலும் தடுக்க முடியாது. வாக்கு வங்கிக்காக ஒரு குண்டு வெடிப்பை கூட நியாயப்படுத்தி பேசும் முரசொலி பத்திரிகையை நடத்தும் திமுகவின் ஆட்சி வெட்கக்கேடானது. தேசிய புலனாய்வு முகமையை குறித்து எதுவுமே தெரியாமல், அதை கலைக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது.

திமுகவை எதிர்த்து துவங்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இன்று திமுக வீசிய 2 எம்எல்ஏ சீட்டு எலும்பு துண்டுகளுக்காக இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் மனிதநேய மக்கள் கட்சி இன்று பாஜகவை விமர்சிக்கிறார்கள். சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி என்ன செய்வது என்று தான் விவாதிக்க தயாராக இருக்கிறேன்.

அதே நேரத்தில், இஸ்லாமியர்களுக்கு திமுக என்ன செய்தது என்பதை பற்றி விவாதிக்க ஜவாஹிருல்லா அவர்கள் நேரடியாக பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்க தயாரா?. இஸ்லாமிய இளைஞர்களை தவறாக வழி நடத்துகின்றார்.

வெற்றிமாறன் போன்ற சில இயக்குனர்கள் தமிழர்களை காப்பாற்றுவோம் என்கிற பெயரை தமிழர்களை தவறாக பயன்படுத்துகிறார்கள். சோழர் என்பவர் ஹிந்து இல்லை என்றால் அவர் யார் கிறிஸ்தவரா? இஸ்லாமியரா? என்றும் கேள்வி எழுப்பினார். இந்து என்பது மதம் அல்ல.. இந்து என்பது வாழ்வியல் முறை, இஸ்லாமியம் என்பது வழிபாட்டு முறை.

இந்தியாவில் உள்ளவர்கள் எந்த மதத்தை பின்பற்றினாலும், வாழ்வியல் முறையால் அவர்கள் இந்து என்றே அழைக்கப்படுவார்கள். என்றும், தேசத்தால் இந்துக்கள் என்று சொல்வதில் நாங்கள் பெருமைப்படுகிறோம் இவர்களுக்கு எல்லாம்‌ 2024ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு ஒரு முடிவு கட்டப்படும்.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை பாரத் ராஷ்டிரிய சமிதி என பெயர் மாற்றி இருப்பது நகைப்புக்கு உரியது. ஒரு கட்சி வளர்ச்சி அடையும் பொழுது மாநில கட்சியாக இருந்து தேசிய கட்சியாக மாற்றினால் தவறு இல்லை. ஆனால் ஒரு கட்சியானது தனது மாநிலத்தையே தக்க வைக்க முடியாமல் தத்தளிக்கும் பொழுது அதை தேசியக் கட்சியாக மாற்றுவது நகைப்பிற்குரியது. தெலுங்கானாவில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியை கண்டு பயந்தே தனது கட்சியின் பெயரை தற்போது தேசிய கட்சியை மாற்றி இருக்கிறார்.

தெலுங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது. தெலுங்கானா ராஷ்ரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவை திருமாவளவன் சந்தித்திருப்பது எதற்கும் உதவாது. திருமாவளவன் அவரது இருப்பை காட்டிக் கொள்ள இதுபோன்று ஏதாவது ஒன்றை செய்து கொண்டிருப்பார், என்றும் விமர்சித்தார்.

Views: - 437

0

0