கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு : குமரியைச் சேர்ந்த மாணவி முதலிடம்..!!

18 November 2020, 11:21 am
udumalai radhakrishnan - updatenews360
Quick Share

சென்னை : கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி முதலிடத்தை பிடித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் அதற்கான கலந்தாய்வுகளை நடத்த தமிழக அரசு அனுமதியளித்தது. அண்மையில் மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

இந்த நிலையில், கால்நடை மருத்துவப் படிப்பிற்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். அதில், பிவிஎஸ்சி பிரிவில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்னுமாயா 199.25 மதிப்பெண்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, சேலத்தைச் சேர்ந்த சுந்தர்.ஜே (198.50), கோவையைச் சேர்ந்த கோகிலா (197.51), தர்மபுரியைச் சேர்ந்த மோகன வெங்கடேஷ் (197.50), கிருஷ்ணகிரியைச் சேர்ந்த நவீன் நந்தா (197.26) ஆகியோர் முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர்.

இதேபோல, பி.டெக். பிரிவில் தர்மபுரியைச் சேர்ந்த சிவகனி 192 மதிப்பெண்களுடன் முதலிடத்தை பிடித்தார். நாமக்கல் மாவட்டம் ரித்தி (192) 2வது இடமும், விழுப்புரத்தைச் சேர்ந்த நிவேதா (191.50) 3வது இடமும், கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜெகதீப் எட்வீன் (191) 4வது இடத்தையும், விழுப்புரத்தைச் சேர்ந்த அனுஷா (191) 5வது இடத்தையும் பிடித்துள்ளார்.

இணையதளத்தில் மற்ற மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை தெரிந்து கொள்ளலாம் எனக் கூறிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கால்நடை மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.