33 ஆண்டு சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. ரூ.1000 கோடி நிலம் மீட்பு : முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2023, 4:52 pm
CM Stlain - Updatenews360
Quick Share

33 ஆண்டு சட்டப்போராட்டத்தில் ரூ.1000 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.1000 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டது 33 ஆண்டு கால சட்டப்போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. சென்னையில் முக்கிய பகுதிகளில் அரசுக்கு சொந்தமான 115 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சென்னை, செம்மொழி பூங்கவுக்கு எதிரே உள்ள மதிப்பு வாய்ந்த 115 ஏக்கர் கிரவுண்ட் நிலத்தை அரசு கைப்பற்றியுள்ளது. சென்னை கத்தீட்ரல் சாலையின் இருபுறமும் தோட்டக்கலைக்கு சொந்தமான நிலங்கள் அமைந்துள்ளன. அரசு நிலத்தை தனியாரிடம் இருந்து மீட்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் சட்ட முயற்சிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது.

1989-ல் அரசின் கட்டுப்பாட்டில் நிலத்தை கொண்டுவர அப்போதைய முதலமைச்சர் கலைஞர் முயற்சிகளை மேற்கொண்டார்.தோட்டக்கலைத்துறை நிலத்தை பெற 1989ல் கலைஞர் ஆட்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கு தொடர்ந்தது. 2001-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது தோட்டக்கலைத்துறை நிலம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தது. 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து வழக்கை தொடர முடிவு செய்யப்பட்டது.

அரசின் முடிவை எதிர்த்து தோட்டக்கலை சங்கம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு 2007-ல் தள்ளுபடியானது. திமுக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை 2008ல் அனுமதித்து உத்தரவிடப்பட்டது. திமுக அரசின் ஆணையை ரத்து செய்து 1998-ல் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. தோட்டக்கலை நிலத்தை தமிழ்நாடு அரசு பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் இடைக்கல ஆணை வழங்கியது. இந்த உத்தரவை அடுத்து, தோட்டக்கலைத்துறை நிலத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது.

தோட்டக்கலை சங்கத்தின் வசம் இருந்த நிலத்தை அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர நில நிர்வாக ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டார். இதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை 2022-ல் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், உயர்நீதிமன்றம் உத்தரவை அடுத்து ரூ.1000 கோடி மதிப்புள்ள நிலத்தை தமிழ்நாடு அரசு மீண்டும் தன்வசம் கொண்டுவந்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தொடர் முயற்சியால் வெற்றி கிடைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் இதற்கு பாடுபட்ட வருவாய்த்துறை, சட்டத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

Views: - 211

0

0