‘ஏற்கமாட்டோம்… ஏற்க மாட்டோம்’ : முழங்கிய விசிக நிர்வாகிகள்… கலக்கத்தில் திமுகவும்.. திருமாவளவனும்…!!!

4 March 2021, 1:08 pm
vck - updatenews360
Quick Share

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டில் திமுக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே திட்டமிட்டபடி குறைந்த தொகுதிகளை வழங்கப்படும் என்ற ஸ்டாலினின் முடிவுக்கு கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

அந்த வகையில், திமுக தரப்பில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளது. ஆனால், கடந்த தேர்தலில் போட்டியிட்ட 10 தொகுதிகளில் ஒன்றை மட்டும் குறைத்து 9 தொகுதிகள் வேண்டுமென விடுதலை சிறுத்தை வலியுறுத்தி வருகிறது. அதுவும், தனித் தொகுதிகளுடன் பொது தொகுதிகள் சிலவற்றையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை வழங்க திமுக மறுப்பு தெரிவித்து வருகிறது.

திமுகவின் இந்த பிடிவாதத்தினால் அதிருப்தியடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள், 5 தொகுதிகளை ஒதுக்குவார்கள் என்றால், திமுகவுடன் அப்படியொரு கூட்டணி தேவையில்லை என திருமாவளவனிடம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. 4 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள் என மொத்தம் 6 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக திருமாவளவன் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Thiruma - Updatenews360

ஆலோசனையின் போது, திமுக கொடுக்கும் கூடுதல் தொகுதிகளை வாங்கிக் கொண்டு கூட்டணியை உறுதி செய்து விடலாம் என்று நிர்வாகிகளிடம் திருமாவளவன் கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், 6 தொகுதிகள் மட்டும்தான் என்றால், திமுகவுடன் கூட்டணியை தொடர வேண்டாம் என்று நிர்வாகிகள் முழக்கம் எழுப்பினர். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

இன்று மாலை திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் இந்த முடிவு ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 21

0

0