பஞ்சமி நிலத்தை அபகரித்த திமுக எம்பி…? டிராக்டரில் உழுது எதிர்ப்பு தெரிவித்த விசிக.. ‘இதுதான் திராவிட மாடலா..?’ எனவும் கேள்வி..!!

Author: Babu Lakshmanan
10 August 2022, 1:20 pm
Quick Share

விழுப்புரம் : திண்டிவனம் அருகே பஞ்சமி நிலத்தை திமுக எம்பி அபகரித்ததாகக் கூறி, அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ் எடையாளம் பகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் கல்லூரி ஒன்றை கட்டி வருகிறார்.

கடந்த 27ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மயிலம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் செல்வ சீமான் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர், அந்தக் கல்லூரி வளாகத்தில் டிராக்டருடன் உள்ளே நுழைந்தனர்.

ஜெகத்ரட்சகனின் மகன் மற்றும் மகள் ஆகியோருக்கு சொந்தமான இடத்தில் உழுது அப்பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிகளை நட்டு வைத்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, செல்வ சீமான் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வன்கொடுமை சட்டத்தின் கீழ், ஜெகத்ரட்சகன் எம்.பி. கைது செய்யப்பட வேண்டும் என்றும், பஞ்சமி நிலத்தை அபகரிக்கும் இதுதான் திராவிட மாடலா ? என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டியிருந்தார்.

திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்ததால். அவசர அவசரமாக ஒட்டப்பட்ட அனைத்து இடங்களிலும் இருந்து போஸ்டர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஒப்புதலோடு, அக்கட்சி மாவட்ட செயலாளர் சேரன், தங்களது கட்சியின் செயல்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகக் கூறி, மயிலம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் செல்வ சீமானை அக்கட்சியிலிருந்து மூன்று மாதத்திற்கு தற்காலிகமாக நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியே, பஞ்சமி நிலத்தை அக்கட்சியின் எம்பி ஒருவர் ஆக்கிரமித்ததாகக் கூறி போஸ்டர் அடித்தும், டிராக்டரில் உழுது போராட்டம் நடத்தியதும் ஆளும் கட்சியினருக்கு பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.

Views: - 1109

0

0