விஸ்வரூபம் எடுக்கும் விழுப்புரம் கொலை விவகாரம்… முதலமைச்சர் ஸ்டாலின் மீது பாயும் வணிகர்கள்!

Author: Babu Lakshmanan
31 March 2023, 8:58 pm
Quick Share

விழுப்புரம் நகரில் நடந்த ஒரு பயங்கர கொலைச் சம்பவம் தமிழகத்தையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு இருக்கிறது. அது அரசியலில் ஒரு விவாத பொருளாகவும் மாறி
உள்ளது. இது தொடர்பாக அதிமுக, பாஜக தலைவர்கள் திமுக அரசை கடுமையாக சாடியதை விட தமிழக வணிகர்கள் கொதி நிலைக்கு போய் இருப்பதையும் காண முடிகிறது.

இதற்கு முக்கிய காரணம் கத்தியால் குத்தியவர்களில் ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலின் படம் பொறித்த டி-ஷர்ட் அணிந்திருந்ததாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடங்களில் வைரலானதுதான்.

அதற்கு முன்பாக இந்தக் கொலைச் சம்பவம் பற்றி பல்வேறு ஊடகங்களில் வெளியான தகவல்களை கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

“விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்த இப்ராஹிம் எம்.ஜி.சாலையிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் ஊழியர். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த
2 மாதங்களாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

கடந்த 29ம் தேதி மாலை நோன்பு கஞ்சி செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக இப்ராஹிம், தான் வேலை பார்த்த பல்பொருள் அங்காடிக்கு சென்றார். அப்போது அங்கிருந்த ஒரு பெண்ணிடம் 2 இளைஞர்கள் தகராறு செய்ததுடன் அவரை கோபமாக திட்டி தாக்கியும் உள்ளனர்.

இதைக்கண்டு வேதனையடைந்த இப்ராஹிம், அந்த இளைஞர்களிடம் சென்று ஏன் வீண் தகராறு செய்து பெண்ணை தாக்குகிறீர்கள் என்று தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இருவரும், அவரைத் தாக்கியதோடு தாங்கள் வைத்திருந்த கத்தியால், அவரது வயிற்றில் சரிமாரியாக குத்தினர். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த இப்ராஹிம் அதே இடத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

அங்கிருந்து தப்பியோட முயன்ற இருவரையும் அங்கிருந்த கடை ஊழியர்கள் மடக்கிப்பிடித்து விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீசரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் இருவரும்
ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்த ஞானசேகர் என்பவரின் மகன்கள் ராஜசேகர், வல்லரசு என்பது தெரியவந்தது.

இந்தப் படுகொலை சம்பவம் மார்ச் 30-ம் தேதி தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. இதன் மீதான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘‘ராஜசேகர், வல்லரசு ஆகியோர், கஞ்சா போதையில் இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர். கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கம் திமுக ஆட்சியில் அதிகரித்து இருப்பது வேதனையளிக்கிறது’’ என்று கவலை தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்த தகவல்கள்தான்
தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

அவர் கூறும்போது, “ஞானசேகருக்கு வேறோரு பெண்ணிடம் தொடர்பு இருப்பதாகவும், அதனால் பழக்கடையில் வரும் வருமானத்தைக் குடும்பத்துக்குத் தருவதில்லை என்றும் அவரது மனைவியான சாந்தி தனது மகன்களிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மார்ச் 29-ம் தேதி மாலை ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகியோர் தனது தந்தையிடம் இதுகுறித்துக் கேட்க பழக்கடைக்குச் சென்றபோது, அங்கு அவர் இல்லாததால், அங்கிருந்தவர்களிடம் கேட்டு பிரச்சினை செய்திருக்கின்றனர். அப்போது அப்பிரச்சனையில் தலையிட்ட இப்ராஹிம் என்பவரை இருவரும் கத்தியால் குத்தி, காயம் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. காயம்பட்ட இப்ராஹிம் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். வல்லரசு மற்றும் ராஜசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தனிப்பட்ட குடும்பப் பிரச்சினையின் காரணமாக ஏற்பட்ட தகராறின்போது, தடுக்க வந்த நபர், துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி, உயிரிழந்திருக்கக் கூடிய சம்பவம்” என்று குறிப்பிட்டார்.

அதேநேரம் இந்த படுகொலையை கண்டித்து விழுப்புரம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில் 30-ம் தேதி நகர் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் எம் ஜி சாலை, காமராஜர் வீதி, திருவிக வீதி போன்ற பகுதிகள் வெறிச்சோடின.

இவ்விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தவறான தகவல்களை அளித்ததாக காவல்துறை மீது குற்றம்சாட்டிய வணிகர்கள் விழுப்புரத்தின் மையப்பகுதியில் திடீர் சாலை மறியலிலும் இறங்கினர்.

மேலும் கொலை செய்யப்பட்ட இப்ராஹிம் உறவினர்களில் ஒரு பகுதியினர், விழுப்புரம் அடுத்த விராட்டிக்குப்பம் பகுதியில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது, இது தனிப்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக, ஏற்பட்ட தகராறின்போது, அங்கு தடுக்க வந்த நபர் துரதிஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக, முதலமைச்சர் தமிழக சட்டப் பேரவையில் பேசியதற்கு, அவர்கள் கடும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

குடும்ப பிரச்சனை மோதலால் இப்ராஹிம் இறக்கவில்லை. அவர், கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே, இதனை அரசு கவனத்தில் கொண்டு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், சம்பவம் நடந்த பல்பொருள் அங்காடிக்கு முன்பாக, கொலை செய்யப்பட்ட இப்ராஹிம் உடலை வைத்து
அவருடைய உறவினர்களில் இன்னொரு பகுதியினர் போராட்டத்தில் குதித்தனர்.

அதேசமயம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் நிர்வாகிகள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட வணிகர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர்.

உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்கவேண்டும், கொலை செய்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கத்தை விமர்சித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விழுப்புரத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் படம் பொறித்த பனியன் அணிந்த திமுக ரவுடிகள், பட்டப்பகலில் சூப்பர் மார்க்கெட்டில் இப்ராஹிம் ராஜா என்ற சகோதரரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். இன்னொரு கடையிலும் பொதுமக்கள் மேல் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். ஆனால், சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பச் சண்டை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

குற்றவாளிகள் மேல் நடவடிக்கை எடுக்காமல், ஒவ்வொரு குற்றச் சம்பவங்களும், குடும்பச் சண்டை என்ற அளவில் குறைத்துக் காட்டப்பட்டு வருகிறது. ஆட்சியில் உள்ள மிதப்பில் தொடர்ந்து திமுகவினர் ஈடுபடும் கொலை உள்ளிட்ட குற்றங்களை குடும்பச் சண்டை என்று முதலமைச்சர் கடந்து செல்ல முடியாது. பொதுமக்களுக்கு எந்தவிதப் பாதுகாப்புமில்லாமல் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துமாறும், கட்டுப்பாடின்றி அராஜகங்கள் செய்து வரும் திமுக கட்சிக்காரர்களைக் கட்டுப்படுத்தியும் வைக்க தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்’ என கண்டனம் தெரிவித்துள்ளார்.

“குற்ற வழக்குகளில் கதைகளை ஜோடித்து எழுதுவதில் திரைப்பட கதாசிரியர்கள், இயக்குனர்களை விட தமிழக போலீசார் மிகவும் கைதேர்ந்தவர்கள் என்று கூறப் படுவது உண்டு. அதுதான் விழுப்புரம் கொலை சம்பவத்திலும் நடந்திருப்பது போல் தெரிகிறது” என்று சமூக நல ஆர்வலர்கள் மனம் குமுறுகின்றனர்.

“சட்டப்பேரவையில் இப்ராஹிம் கொலை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளதை நன்றாக கூர்ந்து கவனித்து படித்தாலே இச் சம்பவம் குடும்பத் தகராறில் நடந்தது இல்லை என்பது நன்றாக தெரியும்.

முதலமைச்சரின் விளக்கத்தின்படி பார்த்தால் இச்சம்பவம் பொதுவெளியில் நடந்து இருப்பதாக அர்த்தம் ஆகிறது. இந்த 21ம் நூற்றாண்டில் பொது இடத்தில் இருதரப்புக்கு இடையே நடக்கும் சண்டையில் தலையிட்டு சமாதானம் செய்யும் தனி மனித துணிவு தமிழகத்தில் எத்தனை பேருக்கு இருக்கும் என்பது மிகப்பெரிய கேள்வி. அதனால் இப்ராஹிம் வேலை பார்த்த பல்பொருள் அங்காடியில் அண்ணன்-தம்பிகள் இருவரும் ஒரு பெண்ணை தாக்கி இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். தான் பணிபுரியும் கடையில் ஒரு பெண்ணை தன் கண் முன்பாக இரு இளைஞர்கள் தாக்குகிறார்களே என்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவர்களிடம் இப்ராஹிம் தட்டிக்கேட்டு இருக்கலாம். அதுதான் நம்பும்படியாகவும், ஏற்றுக் கொள்ளும் படியாகவும் உள்ளது.

ஒருவேளை இப்ராஹிமை கொன்றவர்கள் திமுகவைச் சேர்ந்த இளைஞர்கள் என கூறப்படுவதால் அதை மறைப்பதற்காக காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் விழுப்புரம் போலீசார் கயிறு திரித்து விட்டார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.

ஏனென்றால் அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரபு என்ற ராணுவ வீரர், திமுக கவுன்சிலர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரால் அடித்துக் கொல்லப்பட்டபோது அது தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலினிடம் விடாமல் கேள்வி எழுப்ப, அதை அவர் காதில் வாங்கிக் கொள்ளாமல் விறுவிறுவென்று நடந்து சென்ற காட்சிதான் நினைவிற்கு வருகிறது.

குறிப்பாக திமுகவினர் குற்றச் செயல்களில் ஈடுபடுவது பொதுமக்களிடம் அக்கட்சிக்கு மட்டுமின்றி ஆட்சிக்கும் அவப்பெயரையே ஏற்படுத்தும். எனவே அதை மறைக்க முயற்சிக்காமல் நடுநிலையோடு முதலமைச்சர் செயல்படுவதுதான்
திமுக அரசுக்கு தமிழக மக்களிடம் நல்ல பெயரை பெற்று தரும்” என்று அந்த சமூக நல ஆர்வலர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.

Views: - 256

0

0