விநாயகர் சிலைகளுடன் சிலை வடிவமைப்பாளர்கள் சட்டசபை முற்றுகை… வாழ்வாதாரத்தை சீரழித்து விட்டதாக தமிழக அரசு மீது குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
31 August 2021, 6:54 pm
protest - updatenews360
Quick Share

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை விதித்ததற்கு கண்டனம் தெரிவித்து சிலை வடிவமைப்பாளர்கள் தமிழக சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்., 10ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்தப் பண்டிகையை இந்து முன்னணி, வி.எச்.பி, பாஜக, இந்து மக்கள் கட்சி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, விநாயகக் கடவுளின் சிலையை ஒவ்வொரு தெருக்களிலும் பிரதிஷ்டை செய்து, 3 நாட்கள் வழிபாட்டுக்கு பிறகு, ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்ததால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது. இதனால், கடந்த ஆண்டு விற்பனைக்காக தயாரித்து வைக்கப்பட்ட சிலைகளை இந்த ஆண்டு விற்று விடலாம் என சிலை வடிவமைப்பாளர் நினைத்திருந்தனர்.

இந்த சூழலில், கொரோனா ஊரடங்கை நேற்று நீட்டித்து உத்தரவிட்ட தமிழக அரசு, பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தடை விதித்தது. அதாவது, விநாயகர்‌ சதுர்த்தியையொட்டி பொது இடங்களில்‌ சிலைகளை பிரதிஷ்டை செய்ய தடை விதிக்கப்படுவதாகவும், விநாயகர் சிலைகள் ஊர்வலம், நீர்நிலைகளில்‌ சிலைகளைக்‌ கரைப்பதற்கும்‌ அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர்‌ சதுர்த்தியை தனி நபர்களாக தங்களது இல்லங்களில்‌ விநாயகர்‌ சிலைகளை வைத்து வழிபடவும்‌, தனி நபர்களாகச்‌ சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில்‌ கரைக்கவும் அனுமதியளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், டாஸ்மாக் கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்டு வரும் நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் முழு தடை விதிப்பது ஏன்..? என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை விதித்ததற்கு கண்டனம் தெரிவித்து சிலை வடிவமைப்பாளர்கள் தமிழக சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது, கொரோனாவால் ஏற்கனவே வாழ்வாதாரம் இழந்த நிலையில், தமிழக அரசு எங்களை மேலும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளிவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

Views: - 108

0

0