விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு..!

17 August 2020, 1:02 pm
Vinayagar sathurthi 1- updatenews360
Quick Share

மதுரை : விநாயகர் சதுர்த்தியையொட்டி, பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக வரும் 22ம் தேதி கொண்டாடப்பட இருக்கும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்தது.

இது தொடர்பாக கடந்த 13ம் தேதி பிறப்பித்த உத்தரவில், கொரோனா நோய்‌ தொற்று பரவலை தடுக்கவும்‌, பொதுமக்கள்‌ நலன்‌ கருதியும்‌, பொது இடங்களில்‌ விநாயகர்‌ சிலைகளை நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர்‌ சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்‌ செல்வதோ, அச்சிலைகளை நீர்நிலைகளில்‌ கரைப்பதோ, தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள்‌ அமலில்‌ உள்ள நிலையில்‌ அனுமதிக்க இயலாது. எனவே, விநாயகர்‌ சதுர்த்தி பண்டிகையை அவரவர்‌ வீடுகளிலிலேயே கொண்டாட அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அரசின் இந்த உத்தரவு ஏமாற்றம் அளிப்பதாகவும், திட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடப்படும் என இந்து முன்னணி அமைப்பு பகிரங்கமாக அறிவித்தது. மேலும், விநாயகர் சதுர்த்தியையொட்டி, சிலைகளை வடித்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, பொது இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்ய விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக்கோரி பா.ஜ.க. வழக்கறிஞர் ராமசாமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்தார். மேலும், இதனை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் சத்தியநாராயணன் – ராஜமாணிக்கம் அமர்வு முன்பு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதிகள் மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்போவதாக தெரிவித்தனர்.

Views: - 44

0

0