2015-ல் அப்படி…2021-ல் இப்படி! சென்னையை தவிக்கவிட்ட தன்னார்வலர்கள்!

Author: kavin kumar
13 November 2021, 9:56 pm
Quick Share

தலைநகர் சென்னையை கடந்த ஒரு வாரமாக உண்டு, இல்லை என்று ஒரு வழி பண்ணிய கனமழை முற்றிலுமாக நின்று மக்களை சற்று நிம்மதி பெருமூச்சுவிட வைத்துள்ளது.கடந்த 2-ம் தேதி முதல் 11-ம் தேதி இரவு வரை சென்னை நகரில் சுமார் 60 சென்டிமீட்டர் மழையும் புறநகர் பகுதிகளில் 55 சதவீத மழையும் பதிவாகி இருக்கிறது.முதலில் கனமழை காரணமாக சென்னையின் அத்தனை முக்கிய இடங்களும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆர்கே நகர், காசிமேடு, கொருக்குப்பேட்டை, படாளம் பெரம்பூர், கொராட்டூர், கொளத்தூர், பெரவள்ளூர், முகப்பேர், அண்ணா நகர், அரும்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, தி.நகர், கேகே நகர் ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர் எழும்பூர், பட்டினப்பாக்கம், அடையார், வேளச்சேரி என்று நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

அதைத்தொடர்ந்து, அடுத்த இரண்டு நாட்களில் சென்னையின் புறநகர் பகுதிகளான திருவொற்றியூர், மாதவரம், பூந்தமல்லி, ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர் போன்ற நகரங்களும் வெள்ளத்தின் பிடியில் சிக்கிக் கொண்டன. மழை நீர், வெள்ளம் இப்போது படிப்படியாக வெளியேற்றப்பட்டும், தானாக வடிந்தும் வருவதால் நிலைமை ஓரளவு சீராகி உள்ளது. எனினும் குளம்போல் தேங்கிக் கிடக்கும் வெள்ளத்தை அகற்றும் பணி சென்னை மாநகராட்சிக்கு இன்னும் பெரும் சவாலாகவே உள்ளது.தற்போது சென்னை நகரிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பெய்த மழை 2015-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை மீண்டும் அப்படியே நினைவு படுத்துவதாக இருக்கிறது. அந்த ஆண்டின் நவம்பர் 1-ம் தேதி மட்டும் ஒரே நாளில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சென்னை நகரில் 41 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது.

அதற்கு முன்பாகவும் நான்கைந்து நாட்கள் கனமழை பெய்திருந்ததால் சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் தனித்தீவு போல ஆகிப்போனது. இதனால் சுமார் 40 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் செம்பரம்பாக்கம் ஏரி நள்ளிரவில் திறக்கப்பட்டதால் தாம்பரம், முடிச்சூர், அனகாபுத்தூர், குன்றத்தூர், பல்லாவரம் உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆயிரக்கணக்கான வீடுகளில் 7 அடி உயரம் வரை வெள்ளம் புகுந்தது. இந்த பெரு வெள்ளத்தின் போது தன்னார்வலர்கள் காட்டிய வேகமும், சுறுசுறுப்பும் உலகமே வியக்கும் அளவில் இருந்தது. ஏனென்றால் நடிகர்கள் விஷால், சித்தார்த், பாபி சிம்ஹா, ஆர்.ஜே பாலாஜி என்று பலர் நேரடியாக களத்தில் குதித்தனர். மின்சாரம், செல்போன் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையிலும் உயிரை பணயம் வைத்து மாநகராட்சி அதிகாரிகள்,

ஊழியர்கள் செல்ல முடியாத இடங்களுக்கு கூட இவர்கள் படகுகள் மூலம் சென்று உணவு, பால், குடிநீர், பிஸ்கட், போர்வை, பாய், மருந்து பொருட்கள், உடைகள் தலையணைகள் என வழங்கினர்.50க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தனிநபர்களும் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு அதிக உதவிகளை வழங்கினர். வெளிநாடுகளில் வசிக்கும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் சிலரும் இதில் பங்கேற்றனர். வெள்ளம் வடியும் வரை இந்த உதவிகளை அன்றாடம் செய்தனர். இதனால் நடிகர்கள் விஷால், சித்தார்த், பாலாஜி ஆகியோர் சமூகப் போராளிகள் என்றும் பாராட்டப்பட்டனர்.

ஆனால் தற்போது சென்னை நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கும்போது தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தனிநபர்களின் உதவி மருந்துக்குக் கூட கிடைக்கவில்லை. அதுமட்டுமல்ல ஆளும் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட ஒருசில கட்சிகள் தவிர வேறு எந்தவொரு அரசியல் கட்சியும் முழுவீச்சில் களத்தில் இறங்கி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை அபயக் கரம் நீட்ட வில்லை.தன்னார்வலர்கள், தனியார் தொண்டு அமைப்புகள் சென்னையில் எங்குமே யாருக்கும் உதவிகள் செய்வதையும் காண முடியவில்லை. நடிகர்கள் விஷால், சித்தார்த், ஆர்.ஜே பாலாஜி போன்றோர் எங்கே போனார்கள்?… என்பதும் புரியாத புதிராக இருக்கிறது. இந்த கேள்வியை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் ஊடகங்களில் எழுப்பி வருகின்றனர்.

இதற்கு இருவித காரணங்கள் சொல்லப்படுகிறது. திமுகவினர் கூறும்போது, “முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு ஆறுதல் கூறுவதுடன் நிவாரண உதவிகளையும் வழங்குகிறார். திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் நிவாரணப் பணிகளில் சுறுசுறுப்பு காட்டி வருகின்றனர். இதனால்தான் இந்த முறை சென்னை வெள்ளத்தின்போது தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் எந்தவொரு வேலையும் இல்லாமல் போய்விட்டது” என்று மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். அதிமுக நிர்வாகிகளோ,”2015 வெள்ளத்தின்போது சில நடிகர்கள் திட்டமிட்டே தங்களை சமூகப் போராளிகள் போல் அடையாளம் காட்டிக்கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தனர்.

அதை அதிமுகவினர் யாரும் தடுக்கவில்லை. அவர்களும் மக்களுக்கு உதவட்டும் என்று ஊக்கம் அளித்தோம். ஆனால் தற்போது அந்த நடிகர்களாலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களாலும் உதவி செய்ய முடியவில்லை. ஏனென்றால் தாங்கள் மறைமுகமாக ஆதரிக்கும் கட்சியின் ஆட்சி அவலத்தை நாமே அம்பலப்படுத்துவது போலாகிவிடும் என்றும் அவர்கள் கருதியிருக்கலாம்.ஒருவேளை, இவர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட முயன்றாலும் கூட திமுகவினர் அதை கைப்பற்றி பாதிக்கப் பட்டவர்களுக்கு கொடுத்து, தாங்களே உதவியதுபோல ‘ஸ்டிக்கர்’ ஒட்டி கொள்ளவும் வாய்ப்பும் உண்டு.

அதனால் நமக்கு ஏன் வம்பு என்று பயந்து கூட அந்த நடிகர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவாமல் ஒதுங்கிக் கொண்டிருக்கலாம்.ஏனென்றால் திமுக ஆட்சிக்கு வந்த சில வாரங்களில் அரசு சார்பில் வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசி டோக்கன்கள் அவ்வளவையும் திமுக நிர்வாகிகள் கைப்பற்றிக்கொண்டு தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே அவற்றை கொடுத்த நிகழ்வையும் மாநிலம் முழுவதும் பரவலாக காண முடிந்தது” என்றனர்.பொது நல ஆர்வலர்களோ, “சமூகப் போராளிகள் என்று பெயர் வாங்கிய நடிகர்கள் அற்பக் காரணங்களுக்காக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யாமல் குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருப்பது கோழைத்தனமான செயல்.

இனி இவர்கள் இந்த அடைமொழிக்கு பொருத்தமானவர்கள் அல்ல. உண்மையிலேயே தன்னார்வத் தொண்டு என்பது எல்லா காலங்களிலும் ஒரே மாதிரி இருக்கவேண்டும். அரசும் இதுபோன்ற பேரிடர் காலங்களில் கவுரவம் பார்க்காமல் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், தன்னார்வலர்களையும் நிவாரணப் பணிகளில் இணைத்துக்கொண்டால் பாதி சுமை குறைந்து விடும். இல்லையென்றால் நான்கைந்து நாட்களில் முடிய வேண்டிய நிவாரணப் பணிகள் 2 வாரம், 3 வாரம் என்று இழுத்துக்கொண்டே போகும். அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையிலும் உதவாது. இதுபோன்ற பேரிடர் காலங்களில் நிவாரணம் என்பது உடனுக்குடன் கிடைக்கவேண்டும் “என்று தெரிவித்தனர்.

Views: - 572

0

0