அதிமுகவுக்கு வந்தால் ஏற்றுக் கொள்ள தயார்…! நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர்

6 August 2020, 2:19 pm
Edappady 01 updatenews360
Quick Share

திண்டுக்கல்: நயினார் நாகேந்திரன் அதிமுகவிற்கு வந்தால் ஏற்றுக் கொள்ள தயார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

சில நாட்களுக்கு முன்பாக, தமிழக பாஜக நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பல மாற்றங்கள் இருந்தன. அதை தொடர்ந்து நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தி நிலவியது. அவர்களில் முக்கியமானவர் நயினார் நாகேந்திரன்.

கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் தாம் வருத்தமாக இருப்பதாக கூறியிருந்தார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், பாஜகவில் நான் மன வருத்தத்தில் இருக்கிறேன். கட்சி தலைமை மீதும் வருத்தத்தில் உள்ளேன் என்று கூறி இருந்தார். அவரது இந்த பேட்டி தமிழக பாஜகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் இந்த பேட்டி குறித்து ஒரு விளக்கமும் கூறி இருந்தார் நயினார் நாகேந்திரன். அந்த விளக்கத்தில், ஒவ்வொரு பாஜக தொண்டருக்கும் ஏற்படும் சாதாரணமான, நியாயமான கோபமும் வருத்தமும் தான் என்னிடம் இருக்கிறது என்று தெளிவுப்படுத்தி இருந்தார்.

இதையடுத்து, நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இணைய வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள், நயினார் நாகேந்திரன் அதிமுகவில் சேர வந்தால் அவரை யாரும் மறுக்க மாட்டார்கள், அவரோடு சென்ற அனைவரும் மீண்டும் அதிமுகவிற்கே வந்துவிட்டார்கள் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பதாவது: நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இருந்து தான் பாஜகவிற்கு சென்று உள்ளார். மீண்டும் அவர் அதிமுகவுக்கு வரலாம். அவர் வந்தால் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0