அண்ணாமலை வைத்த ஆப்பு! ஊசலாடும் PTR அமைச்சர் பதவி?…
Author: Udayachandran RadhaKrishnan24 September 2021, 1:04 pm
திமுக ஆட்சி அமைந்த பின்பு கடந்த 4 மாதங்களில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் அமைச்சர் யார்?…என்ற கேள்வி எழுந்தால் கண்களை மூடிக்கொண்டு அது நிதியமைச்சர் PTR தியாகராஜன் என்று சொல்லிவிடலாம்.
சர்ச்சையில் சிக்கிய பிடிஆர்
தமிழகத்தின் நிதியமைச்சராக பதவியேற்ற முதல் வாரமே கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவை வம்புக்கு இழுத்தார். “இந்து சமய அறநிலையத்துறையிடமிருந் து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று ஜக்கி வாசுதேவ் கூறுவது பணம் சம்பாதிக்கும் ஒரு வழிதான்” என்று விமர்சனம் செய்தார்.
இத்தனைக்கும் இந்து சமய அறநிலைத்துறை அவருக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாத ஒன்று.
தேதி சொன்னோமா?
அடுத்து, பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாக சொன்னீர்களே, ஆனால் குறைக்கவில்லையே? என்ற கேள்வியை PTR தியாகராஜனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, நாங்க என்ன தேதி போட்டோமா? என்று எதிர்க்கேள்வி எழுப்பினார். அரசியல் கட்சிகளால் இதுவும் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
அரசு ஊழியர்களை விமர்சித்த அமைச்சர்
ஜூலை மாதம் அறிவித்த அகவிலைப்படியை தரும்படி அரசு ஊழியர்கள் கேட்டபோது, அடுத்தாண்டு ஏப்ரல் மாதம்தான் கிடைக்கும் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதுமட்டுமின்றி அரசு ஊழியர்கள் வாங்கும் சம்பளம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “அரசுக்கு வரும் வருவாயில் பெரும்பகுதி அரசு ஊழியர்களுக்கும், அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்குமே போய்விட்டால் அரசாங்கத்தை எப்படி நடத்த முடியும்?” என்று எழுப்பிய கேள்வி அரசு ஊழியர்களை கொதிப்படைய வைத்தது. இதனால் அவர்கள் முதலமைச்சரிடம் முறையிடவும் செய்தனர்.
சமாதானம் செய்த ஸ்டாலின்
இப்படி எந்தவொரு விஷயத்திலும் அமைச்சர் தியாகராஜன் முன்கோபி ஆகவும், எரிச்சலுடன் பதில் பதில் சொல்வதைக் கண்டு முதலமைச்சர் ஸ்டாலின் அதிர்ச்சி அடைய நேர்ந்தது.
அண்மையில் கூட, தமிழக சட்டப்பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குறித்து அவர் கடுமையாக பேசியது, ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு சமாதானம் செய்து வைக்கும் அளவிற்கு போனது.
ஜிஎஸ்டி – வளைகாப்பு
இந்த நிலையில்தான் கடந்த வாரம் லக்னோ நகரில் நடந்த 45-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், தான் கலந்து கொள்ளாதது பற்றி நிதியமைச்சர் தியாகராஜன், “வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதால் செல்ல முடியாமல் போய்விட்டது. லக்னோ நகருக்கு போகவேண்டும் என்றால் இரண்டு மூன்று விமானங்கள் மாறிச் செல்ல வேண்டும். ஒன்றரை நாள் பயணிக்கவேண்டும். சிறிய விமானங்களில் பயணம் செய்வதும் கடினம்” என்று விளக்கம் அளித்ததார்.
அண்ணாமலை கேட்ட கேள்வி
இதைத்தான் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கெட்டியாக பிடித்துக் கொண்டார். தியாகராஜனுக்கு பல்வேறு கிடுக்குப்பிடி கேள்விகளையும் எழுப்பினார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று திமுக கூறியதே, இந்தக் கூட்டத்தில் நீங்கள் கலந்துகொண்டு இந்த கோரிக்கையை எழுப்பி இருக்கலாமே? நாட்டு மக்களின் நலனை விட உங்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பெரிதாகத் தெரிகிறதா? என நறுக்கென்று கேட்டார்.
இது திமுக இமேஜ் மீது விழுந்த 2-வது பலத்த அடியாக அமைந்தது. முதல் பலத்த அடி நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிவிட்டு தடுக்க முடியாமல் போனது ஆகும்.
அண்ணாமலை கடிதம்
மேலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை இதுதொடர்பாக விளக்கம் கேட்டு சுடச்சுட ஒரு நீண்ட கடிதத்தையும் எழுதினார்.
அதில், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நடைபெற்ற 45-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பேசப்பட வேண்டிய ஏராளமான பிரச்சனைகள் இருந்தும், தமிழக அரசின் சார்பில் நிதியமைச்சர், பங்கு பெறவில்லை என்பது தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் செய்தி. 45-வது ஜிஎஸ்டி கூட்டம் இணையவழியில் நடைபெறாமல், நேரடிப் பங்களிப்பில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர். ஆனால் தமிழகத்தின் பிரதிநிதியாக நிதியமைச்சர் பங்கேற்கவில்லை.
பெட்ரோலிய பொருட்களில் உள்ள பல கட்ட வரிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி ஜிஎஸ்டி பட்டியலில் இணைக்க வேண்டும் என்று எதிக்கட்சித் தலைவராக தாங்கள் உரத்த குரலில் பேசியது மக்களால் வரவேற்கப்பட்டது, ஆனால் ஆட்சியில் வந்து அமர்ந்த பின்னர் தங்கள் நிலைப்பாடு தலைகீழாக மாறியதற்கு காரணம் சொல்ல வேண்டிய தாங்களும், தங்கள் நிதி அமைச்சரும் பாராமுகமாக நடப்பது மக்களை வஞ்சிக்கும் செயல்” என்று கூறிஇருந்தார்.
இது ஸ்டாலினுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் அவர் முதலமைச்சரான பிறகு, எதிர்க்கட்சித் தரப்பில் இருந்து யாருமே இப்படி காரசாரமாக கேள்வி கேட்டு அவருக்கு யாரும் கடிதம் எழுதியது இல்லை என்பதுதான். இதனால் அண்ணாமலையின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நெருக்கடி ஸ்டாலினுக்கு ஏற்பட்டது.
டிகேஎஸ் இளங்கோவனுக்கு எச்சரிக்கை
இந்த நிலையில்தான் திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் நிதியமைச்சருக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.
அவர் கூறும்போது, “பிடிஆர் தியாகராஜன் மற்றவர்களிடம் வம்புகளை தொடங்குவதில்லை. ஆனால் அவர்கள் தொடங்கி வைக்கும் வம்புகளில் எளிதாக தன்னை உட்படுத்திக் கொள்கிறார். எளிதில் கோபமும், எரிச்சலும் அடைகிறார். பொது வாழ்க்கையில் இருக்கும் ஒருவர் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடாது. திமுக தலைவரான முதலமைச்சர் அனைவரையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஒவ்வொரு அமைச்சரின் செயல்பாடுகளையும் அவர் பார்த்துக் கொண்டுதான் உள்ளார். தியாகராஜன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கவேண்டும் நிதியமைச்சர் என்பவர் தனது மாநிலத்தை அந்தக் கூட்டத்தில் பிரதிநிதித்துவப் படுத்துகிறார் என்பதால் அவர் கலந்து கொண்டிருக்க வேண்டும். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது, அவருடைய முடிவு தன்னிச்சையானது”என்று கூறியிருந்தார்.
டுவிட்டை நீக்கிய அமைச்சர் பிடிஆர்
இதன்பின்பு பிடிஆர் தியாகராஜன் போட்ட ஒரு டுவிட்தான் தற்போது தமிழக அரசியல் களத்தை மேலும் பரபரப்பாக்கி விட்டுள்ளது. யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் மொட்டையாக ஒரு ட்வீட்டை அவர் பதிவு செய்தார்.
போட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே அதை நீக்கியும் விட்டார். ஆனால் அந்தப் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்தவர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
நீக்கப்பட்ட அந்த பதிவில் பிடிஆர் தியாகராஜன், “கட்சியின் இருபெரும் தலைவர்களாலும் இருமுறை நீக்கப்பட்ட வயதான முட்டாள் ஒருவர், 2 கிலோ இறால் வாங்கி வருவதற்கு மட்டுமே தகுதியானவர். அவர் என்னைப்பற்றி கூச்சலிட்டு இருக்கிறார்”என்று தாக்கியிருந்தார்.
தமிழக நிதியமைச்சரின் இந்த பதிவு கருணாநிதி,ஸ்டாலின் ஆகியோரால் இருமுறை கட்சியில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டவர் என்று கூறப்படும் திமுக எம்பி, டிகேஎஸ் இளங்கோவனைத்தான் குறிக்கிறது என்று திமுக வட்டாரத்திலேயே பரபரப்பாக பேசப்படுகிறது.
பிடிஆரின் அடுத்தடுத்த ட்விட்களை தொடர்ந்து அவருக்கு பாஜக, அதிமுக தரப்பில் இருந்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் நிதி அமைச்சராக இருக்கும் ஒருவருக்கு நிலையான அறிவும், மனநிலையும் இருக்க வேண்டும். மாறாக தமிழக பொருளாதாரத்தையும், அமைச்சரவையையும் பாதிக்கச் செய்யும் வகையில் செயல்படும் நபருக்கு அமைச்சர் பதவி வழங்க கூடாது. இந்த ட்வீட், அவர் தனது ட்வீட்களை நீக்கியதற்கான உதாரணம்” என்று பிடிஆரை விமர்சனம் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த பிடிஆர் ட்விட்டரில் பலரை பிளாக் செய்து வருகிறார்.
கொந்தளித்த பெண் பாஜக பிரமுகர்
இந்த நிலையில்தான் பாஜக உறுப்பினரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டில், “உங்களால் தமிழ்நாட்டில் இருக்கும் 8 கோடி பேரையும் பிளாக் செய்ய முடியாது. அதனால் பிடிஆர் அவர்களே, நீங்கள் ஒரேயொரு விஷயம் செய்யுங்கள்.. உங்களை நீங்களே ட்விட்டரில் பிளாக் செய்து கொள்ளுங்கள். இதுதான் உங்களுக்கும், எங்களுக்கும் நல்லது”என்று கிண்டல் செய்து இருக்கிறார்.
பிடிஆரின் ட்விட்களுக்கு அதிமுக தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வந்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தனது பதிவில் “தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகிற ஜிஎஸ்டி கூட்டத்தில் பிடிஆர் கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. அதற்கு அவர் சொல்லுகிற காரணமும் ஏற்க கூடியதாக இல்லை. நான் மக்கள், மற்றும் வணிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் 30க்கும் மேற்பட்ட கூட்டங்களில் கலந்து கொண்டு இருக்கிறேன். ஒரு கூட்டத்தில் கூட கலந்து கொள்ளாமல் இருந்தது கிடையாது. நிதியமைச்சர் தனது கடமையை செய்யாமல் இருப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம். தம்பி பிடிஆர் கவனத்தில் கொள்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
அரசியல் விமர்சகர்கள் கருத்து
இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “நிதியமைச்சர் தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்பதுபோல பேசி வந்தார். ஆனால் தெரிந்தோ, தெரியாமலோ பாஜகவை கடுமையாக தாக்கப் போய் வம்பில் சிக்கிக் கொண்டு விட்டார். இதுதான் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்வது என்பது.
அமைச்சர்களாக இருப்பவர்கள் எதையும் தடாலடியாக பேசக்கூடாது. திமுகவின் மூத்த எம்பி ஒருவரே அவரை கண்டிக்கிறார் என்றால் அது திமுக தலைவர் ஸ்டாலின் கண் அசைவின்றி நடக்காது. ஜிஎஸ்டி கூட்டத்தில் பிடிஆர் தியாகராஜன் கலந்து கொள்ளாதது அவருடைய தனிப்பட்ட முடிவு என்று டிகேஎஸ் இளங்கோவன் கூறியிருப்பது நிதியமைச்சருக்கு கிடைத்த மூக்குடைப்பு” என்று குறிப்பிட்டனர்.
0
0