ஜனாதிபதிஆட்சி…? இடைத்தேர்தல் இழுபறி…! மம்தாவை அச்சுறுத்தும் இரட்டை சிக்கல்!!

5 July 2021, 12:35 pm
Quick Share

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக நடந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 213-ஐ வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த வியூகங்களை, மம்தா பானர்ஜி அப்படியே செயல்படுத்தியதால் அவருக்கு இந்த வெற்றி கிடைத்தது.

வெற்றியும்… கலவரமும்…

தேர்தல் நடைபெறுவதற்கு முன்புவரை ஆட்சியை கைப்பற்றுவதில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியானபோது 3-ல் இரண்டு பங்கு இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் எளிதாக கைப்பற்றி விட்டது.

west bengal minister car attack - updatenews360

தேர்தலுக்கு முன்பு, மாநிலத்தில் பல இடங்களில் கலவரம் நடந்தது. அப்போது வன்முறையை முதலமைச்சர் மம்தா பானர்ஜியே தூண்டி விடுவதாக குற்றச்சாட்டும் எழுந்தது. ஆனால் தேர்தல் பணிக்காக துணை ராணுவம் இருந்ததால் வன்முறைச் சம்பவங்கள் பெரிய அளவில் நடக்கவில்லை.

அதேநேரம் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதும் வன்முறை தலைவிரித்தாடியது. அதுவும் மமம்தா பானர்ஜி, போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுபேந்து அதிகாரியிடம் சுமார் 2 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.
இது எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றியதுபோல் ஆகிப்போனது.

தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு தொடர்ந்து 4 நாட்கள் நடந்த கலவரத்தில் பாஜகவினர்,
15 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமான பெண்கள் பாலியல் தாக்குதலுக்கும் உள்ளாயினர்.
பாஜகவை சேர்ந்தவர்களின் நூற்றுக்கணக்கான வீடுகள், வாகனங்கள், தீக்கிரையாக்கப்பட்டன.
சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு தேடி எல்லையோர உள்ள அசாம் மாநில காடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

மம்தா பானர்ஜி பதவியேற்ற பின்பு, இதன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆளுநருக்கே எச்சரிக்கை

பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மே 7-ந் தேதி கலவரப் பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர்தான் அந்த மாநிலத்தில் வன்முறை எந்த அளவிற்கு தாண்டவமாடி இருக்கிறது என்பதே வெளியுலகிற்கு தெரியவந்தது.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை மாநில
ஆளுநர் ஜகதீப் தன்கர் சந்திக்கக் கூடாது என்று மே 13-ந் தேதி மம்தா பானர்ஜியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களும் கடுமையாக எச்சரித்ததுதான்.

கலவரப் பகுதிகளை அண்மையில் பார்வையிடச் சென்ற தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற குற்றச்சாட்டு தீவிரமாக எழுந்தது.

ஜனாதிபதி ஆட்சி?

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வக்கீல் ரஞ்சனா அக்னிஹோத்ரி, சமூக சேவகர் ஜிதேந்திர சிங் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேற்கு வங்க தேர்தல் வன்முறை தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர்.

அதில், “மதரீதியாக இந்துக்கள் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்தத் தாக்குதல்களை மாநில போலீசார், வேடிக்கை பார்த்துள்ளனர். வன்முறையை ஒடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆயிரக்கணக்கானோர் இன்னும் அச்சத்துடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனவே வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்தில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும்” என்று கூறியுள்ளனர்.

இந்த மனுவை அண்மையில் விசாரித்த நீதிபதிகள் அமர்வு இதுகுறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசு, மேற்கு வங்க அரசு மற்றும் தலைமை தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடுவதற்கு வசதியாக, பவானிபூர் தொகுதியில் வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஷோபன்தேப் சட்டோபாத்யாயா கடந்த மே 21-ந் தேதி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதுதவிர மாநிலத்தில் 6 தொகுதிகள் காலியாக உள்ளன.

Mamata_Banerjee_UpdateNews360

இங்கு இடைத்தேர்தல்களை நடத்தும்படி தேர்தல் கமிஷனுக்கு, மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. நவம்பர் 5-ந் தேதிக்குள் இடைத்தேர்தல் நடக்காமல் போனால், முதலமைச்சர் பதவியில் இருந்து விலகவேண்டிய நெருக்கடி நிலையில் மம்தா பானர்ஜி உள்ளார்.

மேற்கு வங்கத்தில் 6-ம் கட்டத் தேர்தல் நடந்தபோது கொரோனா பரவல் வேகமாக காணப்பட்டது.
அதுபோன்ற நிலையிலும், தலைமை தேர்தல் கமிஷன் தேர்தலை நடத்த தீவிரம் காட்டியதால் சுப்ரீம் கோர்ட்டின் கடும் கண்டனத்திற்கும் உள்ளானது. தற்போது மாநிலத்தில் கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்துவிட்டாலும் அதன் அச்சுறுத்தல் இன்னும் நீடிக்கிறது.

நழுவும் முதலமைச்சர் பதவி

இந்த சூழலில் மம்தா பானர்ஜி போட்டியிடுவதற்காக மட்டும் இடைத்தேர்தலை நடத்தினால் மீண்டும் கோர்ட்டின் கண்டனத்துக்கு உள்ளாக நேரிடுமோ என்று தலைமை தேர்தல் கமிஷன் தயக்கம் காட்டி வருகிறது.

Delhi_South_Block_UpdateNews360

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு விரும்பாது. என்றாலும் கூட
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து சுப்ரீம் கோர்ட்டு கடும் எச்சரிக்கை விடுக்கலாம் என்று மம்தா பானர்ஜி கருதுகிறார். அதனால் தனக்கும், தனது அரசுக்கும் தேசிய அளவில் அவப்பெயர் ஏற்படும் என்ற பெரும் கவலையும் அவருக்கு உள்ளது.

அதேநேரம் இடைத்தேர்தல் தள்ளிப்போனால், முதலமைச்சர் பதவியை துறந்துவிட்டு தேர்தலை சந்திக்க அவர் குறைந்தபட்சம் இன்னொரு 6 மாதம் காத்திருக்கவேண்டும். இதனால் இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிக்கிறார், மம்தா பானர்ஜி!

Views: - 164

1

0