மம்தா போட்டியிடும் தொகுதியில் வன்முறை… திரிணாமுல் – பாஜக தொண்டர்கள் மோதல் : 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

Author: Babu Lakshmanan
27 September 2021, 8:03 pm
mamata - updatenews360
Quick Share

மேற்கு வங்க மாநில மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதன்மூலம் 3வது முறையாக மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தோல்வியடைந்தார்.

இதனால், 6 மாதத்தில் அவர் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே, முதலமைச்சராக தொடர முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதற்காக, பவானிபூர் தொகுதி திரிணாமுல் எம்எல்ஏ சோபன்தேப் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்ட, பவானிபூர் தொகுதி உள்பட 3 தொகுதிகளுக்கு வரும் செப்.,30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்த மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். மம்தாவை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளராக பிரியங்கா திப்ரிவால் போட்டியிடுகிறார். பாஜகவினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பா.ஜ.க தேசிய துணை தலைவர் திலீப் கோஷிற்கு எதிராக திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, இரு தரப்பிற்கிடையே மோதல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திலிப் கோஷ் மீது திரிணமுல் காங்., தொண்டர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு பாஜகவினரும் தாக்கியதாக தெரிகிறது. இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

இது தொடர்பாக பாஜகவினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து தலைமை தேர்தல் ஆணையம் விரிவான அறிக்கை தருமாறு மேற்குவங்க தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, வன்முறை ஏதும் நிகழாமல் இருக்க பவானிபூர் தொகுதி முழுதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 206

0

0