தீர்ப்பு எப்படி வந்தாலும் இபிஎஸ்க்கு சாதகம்தான்… சட்ட வல்லுநர்கள் கணிப்பு… அரசியல் களத்தில் பரபர எதிர்பார்ப்பு..!

Author: Babu Lakshmanan
21 March 2023, 7:48 pm
Quick Share

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கு தற்போது சூடு பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை கோர்ட்டின் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அளித்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ பன்னீர்செல்வமும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் மேல்
முறையீடு செய்தனர்.

அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வும் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பையே உறுதி செய்தது. மேலும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமியை தேர்வு செய்ததையும் சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டது.

அதேநேரம், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக எந்த கோரிக்கையும் எங்கள் முன்பாக வைக்கப்படவில்லை. எனவே, தீர்மானங்கள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை. இவற்றின் மீது கீழமை நீதிமன்றம்தான் முடிவெடுக்கும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்து
ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த அத்தனை மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.

ஏற்கனவே, சென்னை ஐகோர்ட்டில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் ரத்து செய்ததுடன் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் ஒன்றாக இணைந்து செயல்பட முடியாத நிலையில் அவர்கள் இருவரும் இணைந்துதான் சிறப்பு பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று எப்படி கட்டாயப்படுத்த முடியும்?…

15 நாள் நோட்டீஸ் எழுத்துப்பூர்வமாக இருக்கவேண்டும் என அதிமுக சட்டவிதிகளில் எங்கும் கூறப்படவில்லை. மேலும் பொதுக்குழுவை கூட்ட இருவரின் கையெழுத்து அவசியம் என்பதும் ஏற்கத்தக்கது அல்ல! இருவருக்குள்ளும் பரஸ்பரம் ஒத்துழைப்பு இல்லாதபோது கட்சி முடங்கிவிடும். எனவே அதிமுக சட்டவிதிகளின்படி பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் கையொப்பமிட்டு கோரிக்கை அளித்தாலே பொதுக்குழுவை கூட்டலாம் என்பதால் ஜுலை 11 பொதுக்குழுவும் இடைக்கால
பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது, நினைவு கூரத்தக்கது.

இந்த நிலையில்தான் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு வருகிற 26-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அதிமுக தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதில் தற்போதைய இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்துள்ளார்.

பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தலை தடை செய்ய வேண்டும் என்று கோரி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக அவசர வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரித்த ஐகோர்ட் தனி நீதிபதி குமரேஷ் பாபு, தேர்தல் நடைமுறைகளை தொடரலாம். ஆனால் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டது பற்றிய அறிவிப்பு எதையும் வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 22ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இந்த வழக்கில் கடைசி நபராக ஓ பன்னீர்செல்வமும் இணைந்து கொண்டார்.

இதற்கிடையே அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த இடைக்கால மனுக்களையும் அதே 22ம் தேதி சென்னை ஐகோர்ட் விசாரிக்கிறது.

முதலில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த இடைக்கால மனுக்கள் ஏப்ரல் 11ம் தேதி விசாரிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் பொதுச் செயலாளர் தேர்தல் விஷயத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வழக்கு தொடர்ந்ததால் இந்த இடைக்கால மனுக்களையும் சேர்த்து விசாரிக்க ஐகோர்ட் முடிவு செய்துள்ளது.

மார்ச் 22ம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பு தினம் ஆகும். இதனால் வழக்கமாக நீதிமன்றங்களுக்கு அரசு விடுமுறைதான் அளிக்கப்படும். இருப்பினும் அதிமுக விவகாரத்தில் தலைமை நீதிபதியின் சிறப்பு அனுமதி பெற்று விடுமுறை நாளிலும் வழக்கை நடத்த நீதிபதி குமரேஷ் பாபு, முடிவு செய்து இருக்கிறார். அதுமட்டுமின்றி வருகிற 24ம் தேதி தீர்ப்பு வழங்குவது உறுதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு எப்படி இருக்கப் போகிறது என்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.

சட்ட வல்லுநர்கள் இதுபற்றி கூறுவது என்ன?..

கடந்த செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் நடந்த அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையின்போது, இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் நீங்கள் எதற்காக இப்போதே பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்று அவசரம் காட்டுகிறீர்கள். இந்த வழக்கு முடிந்த பிறகு பொதுச் செயலாளர் தேர்தலை நடத்திக் கொள்ளலாமே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதை இபிஎஸ் தரப்பினர் ஏற்றுக்கொண்டு பொதுக்குழு வழக்கு முடிந்த பிறகு பொதுச் செயலாளர் தேர்தலை நடத்திக் கொள்கிறோம் என்று உறுதியும் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில்தான் இப்போது பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துகிறோம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் இந்த வழக்கில் வலுவான வாதம் வைக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

தவிர பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பு வந்தால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியது செல்லுபடியாகும். அதுமட்டுமின்றி எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் ஆவதும் உறுதி செய்யப்பட்டு விடும்.

ஒருவேளை அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டால் ஓபிஎஸ் தரப்பிற்கு ஆறுதலாக அமையலாம். ஆனால் அடுத்தகட்டமாக பொதுக்குழுவை கூட்டி முடிவுகளை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அதற்கு ஓபிஎஸ் தரப்பில் எத்தனை பேர் பொதுக்குழுவில் ஆதரவாக இருப்பார்கள் என்பதுதான் கேள்விக்குறி. எடப்பாடி பழனிசாமி பக்கம் பொதுக்குழு உறுப்பினர்கள் 2500-க்கும் மேற்பட்டோர் ஆதரவாக நிற்கின்றனர். இதனால் அவருக்கு சாதகமாக பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றி மீண்டும் ஓபிஎஸ் நீக்கம், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பன போன்ற அதிரடி நடவடிக்கைகள்தான் அரங்கேறும்.

இதனால் தீர்ப்பு எப்படி வந்தாலும் இபிஎஸ்க்கு சாதகமாகவே இருக்கும்.

அதிமுக பொதுக்குழு செல்லும் என்பதை ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் உறுதி செய்து இருக்கிறது. அதனால் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் கோரிக்கையை ஏற்று
பொதுக்குழுவை கூட்டுவதற்கு எந்தத் தடையும் இருக்காது. இதனால் ஓபிஎஸ் பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக மீண்டும் மீண்டும் கோர்ட்டு படிகளில் ஏறி சட்டப் போராட்டம் நடத்த முடியாத நிலைக்குத்தான் தள்ளப்படுவார்.

அதன் பிறகு ஓபிஎஸ் எத்தனை முறை தேர்தல் ஆணையத்தை அணுகி பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கக் கூடாது என கோரிக்கை வைத்தாலும் அது ஏற்கப்படாத நிலைதான் ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிசாமி பக்கம் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆதரவும் மிக அதிகமாக இருப்பதுதான். இதன் அடிப்படையில் பார்க்கும்போது எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக பொதுச்செயலாளர் என்பதும் அவருடைய தலைமையில் உள்ள அதிமுகவுக்குத்தான் அங்கீகாரம் கிடைக்கும் என்பதும் நிச்சயம்” என்றும் அந்த சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Views: - 268

0

0