அதிமுகவின் அடுத்த அவைத் தலைவர் யார்..? பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு

Author: Babu Lakshmanan
11 October 2021, 11:58 am
eps ops - updatenews360
Quick Share

சென்னை : அதிமுகவின் புதிய அவைத் தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் மதுசூதனன். கடந்த 2007ம் ஆண்டு அதிமுக அவைத் தலைவராக பதவியை பெற்றார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனன் இருந்தார். இதனால், அவரை பதவியில் இருந்து நீக்குவதாக அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்தார்.

பின்னர், சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைந்தன. இதைத் தொடர்து, மதுசூதனன் மீண்டும் அவைத் தலைவரானார்.

இந்த சூழலில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மதுசூதனன், கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி காலமானார். அவரை மறைவைத் தொடர்ந்து, அதிமுக அவைத் தலைவர் பதவி காலியானது. அடுத்த அவைத்தலைவர் யார் என்ற கேள்வி எழுந்து வந்தது.

அதிமுக அவைத் தலைவர் பதவிக்கான போட்டியில் அக்கட்சியின் மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன், செங்கோட்டையன், செம்மலை, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் என பலரும் இருக்கின்றனர்

இந்த நிலையில், அதிமுகவின் புதிய அவைத் தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுகவின் அவைத் தலைவர் யார் என்பது குறித்து அக்கட்சியின் பொன் விழா கொண்டாட்டத்தின் போது அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொன்விழா கொண்டாட்டம், ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 206

0

0