3-வது பெரிய கட்சி எது…?மல்லுக்கட்டும் ராமதாஸ், அழகிரி..! யார் சொல்வது உண்மை…?

Author: Babu Lakshmanan
14 October 2021, 2:10 pm
ms alagiri - pmk - updatenews360
Quick Share

நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக ஒரு மிகப் பெரிய பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அது தமிழகத்தில் 3-வது பெரிய கட்சி? எது என்பதுதான். இந்தப் பந்தய களத்தில் பாமக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, என 3 கட்சிகள் ஏற்கனவே போட்டி போட்டுக் கொண்டிருந்தன. தற்போது விஜய் மக்கள் இயக்கமும் இதில் குதித்து இருக்கிறது.

மீண்டும் நிரூபணம்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் தனது கட்சிக்கு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்தலில் 48 இடங்கள் கிடைத்திருப்பதை மேற்கோள்காட்டி தமிழகத்தில் பாமகவை 3-வது மிகப் பெரிய அரசியல் கட்சியாக மக்கள் அங்கீகரித்து இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் “ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், மக்களைச் சந்தித்து அவர்களின் நம்பிக்கையை வென்றெடுத்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக பெற்றுள்ள வெற்றி கவுரவமானது, மரியாதைக்குரியது. பாமக தனித்து போட்டியிட்டபோதிலும், ஆளும் திமுக, ஆட்சி செய்த அதிமுக ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் தமிழ்நாட்டின் 3-வது பெரிய அரசியல் சக்தி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. பாமகவை அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்த்திச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், வெற்றியைப் பெற முடியாமல் போனவர்களும் நமக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காகவும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். அதன் மூலம் அடுத்து வரும் தேர்தல்களில் பொதுமக்களின் ஒரே தேர்வு பாமகதான் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

நாங்கதான் 3 பெரிய கட்சி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் அடிப்படையில் காங்கிரஸ்தான் மூன்றாவது மிகப் பெரிய கட்சி என்று கூறுகிறார். அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், “9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களில் வழங்கிய வெற்றியை விட அமோக ஆதரவுடன் உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். 74 ஊராட்சி ஒன்றியங்களில் 73-லும், 140 மாவட்ட ஊராட்சிகளில் 138-லும் மகத்தான வெற்றி திமுக தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்திருக்கிறது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 3-வது பெரிய கட்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது.

alagiri-updatenews360

அதேநேரத்தில், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, தேமுதிக ஆகிய கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவிற்கு படுதோல்வியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அதேபோல, சந்தர்ப்பவாத கூட்டணியாக செயல்படுகிற பாஜகவுக்கும், பாமகவுக்கும் மக்கள் பாடம் புகட்டியிருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

விஜய் மக்கள் இயக்கம் எழுச்சி

இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சுயேச்சைகளாக போட்டியிட்டு உள்ளனர். இவர்களது இயக்க கொடியை கொண்டும், விஜயின் புகைப்படத்தை வைத்தும் பிரச்சாரம் செய்ய விஜய் மக்கள் இயக்கம் தனது வேட்பாளர்களுக்கு அனுமதி அளித்து இருந்தது. மொத்தம் 169 இடங்களில் இந்த இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர்.

இவர்களில் விழுப்புரம் மாவட்டம் வானூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்ட சாவித்திரி என்பவர் வெற்றி பெற்றிருக்கிறார். இதுதவிர ஊராட்சி மன்ற வார்டு தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 114 பேர் வெற்றி பெற்றிருப்பதாக அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறுகிறார்.

vijay makkal iyakkam - updatenews360

போட்டியிட்ட இடங்களின் அடிப்படையில் பார்த்தால் வெற்றி சதவீதம் எங்களுக்குத்தான் மிக அதிகம் என்று 3-வது கட்சி கோதாவில் விஜய் மக்கள் இயக்கத்தினரும் குதித்து இருக்கின்றனர்.

ஓட்டு வங்கி எங்களுக்குத்தான்

நாம் தமிழர் கட்சியோ, “நாங்கள் எல்லா கட்சிகளுக்கும் முந்திக் கொண்டு வேட்பாளர்களை அறிவித்து விட்டதால் அவர்களை பிரபல அரசியல் கட்சி ஒன்று விலைகொடுத்து வாங்கி விட்டது. அதனால்தான் எங்களுக்கு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தேர்தலிலும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்தலிலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. என்றபோதிலும் நாங்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் 6.85 சதவீத ஓட்டுகளை வாங்கி இருக்கிறோம். அதுவும் தனித்துப் போட்டியிட்டு இந்த வாக்குகளை பெற்றிருக்கிறோம். எனவே தமிழகத்தின் மூன்றாவது மிகப் பெரிய கட்சி நாங்கள்தான். அதை எதிர்வரும் தேர்தல்களிலும் நிரூபித்துக் காட்டுவோம்” என்கின்றனர்.

Seeman -Updatenews360

3வது பெரிய கட்சி

உண்மையிலேயே தமிழகத்தில் மூன்றாவது மிகப் பெரிய கட்சி எது?…எதை வைத்து இதை தீர்மானிப்பது?…இதுகுறித்து தேர்தல் ‘அனலிஸ்ட்’கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்போம்!

“பொதுவாக ஒரு கட்சி தனித்துப் போட்டியிடுவதை வைத்துத்தான் அந்த கட்சிக்கு எந்த இடம் என்பதை சொல்ல முடியும். அதன் அடிப்படையில் பார்த்தால் 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டு 5.9 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அந்தக் கட்சிக்கு அப்போது 4 எம்எல்ஏக்களும் கிடைத்தனர். 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாமக தனித்தே போட்டியிட்டது. அப்போது 5.4 சதவீத ஓட்டுகளை அக்கட்சி வாங்கியது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் தற்போது பாமக தனித்துப் போட்டியிட்டது. இதில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தேர்தலில் பாமக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் கூட 48 ஊராட்சி ஒன்றியஉறுப்பினர்கள்
பதவிகளில் வெற்றி கண்டுள்ளது.

Anbumani 03 updatenews360

9 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளில் 7 இடங்களையும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவியில் 32 இடங்களையும் காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது. அதேநேரம், காங்கிரசைப் பொறுத்தவரை, 1989 தேர்தல் தவிர வேறு எந்தவொரு சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதுவரை தனித்து போட்டியிட்டது கிடையாது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும் தனித்துப் போட்டியிட்டது. அது பிரதமர் பதவிக்கான தேர்தல் என்பதால் அப்போது காங்கிரஸ் வாங்கிய 10.7 சதவீத வாக்கை கணக்கில் எடுத்துக் கொள்வது சரியானது அல்ல.

சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிட்டு பெற்ற வாக்குகளின் அடிப்படையில்தான் காங்கிரசின் வாக்கு சதவீதத்தை தீர்மானிக்க இயலும். அப்படிப் பார்த்தால் தமிழகத்தில் கடைசியாக நடந்த 3 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் சராசரியாக 7.5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

ஆனாலும் திமுகவுடன் கூட்டணி அமைத்துத்தான் இந்த சதவீதத்தை காங்கிரஸ் பெற்று இருக்கிறது. இதை காங்கிரசுக்கு மட்டுமே கிடைத்த தனிப்பட்ட சதவீத வாக்குகளாக கூற முடியாது. எனவே காங்கிரஸ் 4-வது இடத்தில் இருப்பது தெளிவான விஷயம்.

சரி, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 7 சதவீத வாக்கிற்கு நெருக்கமாக பெற்றதே அப்படி என்றால் 3-வது பெரிய கட்சி அதுதானே?… என்ற கேள்வி எழலாம்.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் சரி, தனித்து போட்டியிட்டாலும் சரி கடந்த 30 ஆண்டுகளாக ஒரே சீராக 5.5 சதவீத வாக்குகளை பெற்று வந்திருக்கிறது.

வேடிக்கை

நாம் தமிழர் கட்சி 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. 2021 தேர்தலில் 6.85 சதவீத ஓட்டுகள் அக்கட்சிக்கு கிடைத்தது. அதாவது இது திடீர் வளர்ச்சியாக உள்ளது. ஆனால் இந்த உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எனவே 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கும் வாக்குகளை பொறுத்தே அக்கட்சியின் நிலையான வாக்கு விகிதத்தை கணிக்க முடியும். அதுவும் தனித்துப் போட்டியிட்டால் மட்டுமே அதை தீர்மானிக்க இயலும்.

ஏனென்றால் தேமுதிக தொடங்கப்பட்டபோது அக்கட்சி தனித்துப் போட்டியிட்டு 7 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தபோது அந்த சதவீதம் இன்னும் அதிகரித்தது. 2016 தேர்தலில் 2 சதவீதமாக குறைந்தது. 2021 தேர்தலில் தேமுதிகவின் வாக்கு அரை சதவீதமாக சரிந்துவிட்டது. எனவே குறைந்தபட்சம் 3 சட்டப்பேரவைத் தேர்தலை அடிப்படையாக வைத்து வாக்கு சதவீதத்தை தீர்மானிப்பதுதான் சரியானதாக இருக்கும்.

3-வது பெரிய கட்சிக்கான போட்டிக்கு தகுதியாக இன்னொரு கட்சியாக விசிக இருக்கிறது. அக்கட்சிக்கு தனிப்பட்ட முறையில் 6 சதவீத வாக்குகள் வரை இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

ஆனால் விசிக, இனி திமுகவை தவிர வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காது என்கிறார்கள். அதனால் மூன்றாவது கட்சிக்கான போட்டியில் அது இறங்காது. விசிக துணிந்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டால் அதன் சுய பலம் தெரிய வந்துவிடும்.

Congress_Flag_UpdateNews360

விஜய் மக்கள் இயக்கத்தினர், அரசியல் கட்சிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கும் போட்டியிடவில்லை. எனவே 3-வது இடம் தொடர்பான கேள்விக்குள் அக்கட்சி வரவில்லை.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்தனியாக போட்டியிட்டால் அந்தக் கட்சிகளின் தனிப்பட்ட வாக்கு சதவீதத்தை துல்லியமாக தெரிந்துகொண்டு விடலாம்.

தனியாக களமிறங்கி தனது சொந்த வாக்கு சதவீதத்தை வெளிப்படுத்தாத வரை தமிழகத்தில் நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி என்று காங்கிரஸ் கூறிக்கொள்வது வேடிக்கையாகத்தான் இருக்கும்.

உண்மையிலேயே, ஒவ்வொரு கட்சியும் தங்களது சொந்த பலத்தை அறிய விரும்பினால் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தனித்தனியாக போட்டியிடவேண்டும். அப்போது முதல் கட்சி எது?இரண்டாவது பெரிய கட்சி எது? என்பது முதல் தமிழகத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் எத்தனையாவது இடத்தில் இருக்கின்றன என்பதை எளிதில் வரிசைப்படுத்தி விடலாம்.

அதற்கு முன்னோட்டமாக நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் தமிழகத்தின் அத்தனை அரசியல் கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டு தங்களது சுய பலத்தை காண்பித்தாலும் அது ஏற்கக் கூடியதே” என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுவும், சரியான யோசனையாகவே தோன்றுகிறது!

Views: - 197

0

0

Leave a Reply