ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்காதது ஏன்..? யாருடைய அழுத்தத்தால் இந்த தயக்கம்..? தமிழக அரசுக்கு இபிஎஸ் கேள்வி

Author: Babu Lakshmanan
6 June 2022, 3:56 pm
Quick Share

ஆன்லைன் ரம்மியால் சென்னையில் பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்யாதது ஏன் என்று தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மணலி புதுநகர் பகுதியைச் சார்ந்த பாக்கியராஜ் என்பவரின் மனைவி பவானி (29) என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். இவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 20 சவரன் தங்க நகையை விற்று அதன் பணத்தை வங்கியில் செலுத்தி ரம்மி விளையாடி முழு பணத்தையும் இழந்துள்ளார்.

மேலும், பவானியின் இரண்டு தங்கைகளிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி அதையும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்ததாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியோடு இருந்த அவர், நேற்றி இரவு தற்கொலை செய்து கொண்டார்.

ஆன்லைன் சூதாட்டத்தினால் அடுத்தடுத்து தற்கொலை சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற ஆன்லைன் சூதாட்ட ஆப்களை தமிழக அரசு தடுக்காதது ஏன்..? என்று கேள்வியை அரசியல் தலைவர்கள் எழுப்பி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக, யாருடைய அழுத்தத்தின் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன்..? என்று தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சென்னையில் இன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஒரு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில்,தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரிகையிலும் இன்று முழு முதற்பக்க ஆன்லைன் ரம்மி விளம்பரம் வருகிறது.

காவல்துறை டிஜிபி-யே ஆன்லைன் ரம்மி அல்ல அது ஆன்லைன் மோசடி, உங்கள் உயிரைக் கொல்லலாம், என வெளிப்படையாக எச்சரிக்கும் நிலையிலும் கூட, இந்த உயிர்க்கொல்லி ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்?

யாருடைய அழுத்தத்தால் இந்த தயக்கம்? இன்னும் எத்தனை உயிர்களை தெரிந்தே கொல்லப்போகிறது இந்த ஆன்லைன் சூதாட்டம்?,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 553

0

0