காங்கிரசுக்கு குட்பை சொன்ன மகளிர் தலைவி! சோனியா, ராகுலுக்கு இரட்டைத் தலைவலி!

Author: kavin kumar
16 August 2021, 10:06 pm
Quick Share

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைமையில் தேசிய அளவில் ஒரு மெகா கூட்டணியை உருவாக்க என்னதான் முயற்சி செய்தாலும், அதற்கு முட்டுக்கட்டை போடுவது போல அக்கட்சியில் ஏதாவது ஒரு நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது. அது சோதனை மேல் சோதனையாகவும் அமைந்து விடுகிறது. காங்கிரசில் இரண்டாம் கட்ட தலைவர்களாக வளர்ந்து வந்தவர்கள் திடீரென பதவி விலகுவது, கடந்த 2 ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் புகழ் பெற்ற காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த 50 வயது ஜோதிராதித்ய சிந்தியா கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

அதுமட்டுமின்றி, அந்த மாநிலத்தில் மூத்த தலைவர் கமல்நாத் தலைமையில் நடந்து வந்த காங்கிரஸ் ஆட்சி கவிழ்வதற்கும், பாஜக ஆட்சி மீண்டும் அமைவதற்கும் காரணமாக திகழ்ந்தார். இப்போது அவர் மத்திய பாஜக அரசில் சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். கடந்த ஜூன் மாதம், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரபல இளம் காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதா அக்கட்சியில் விலகி பாஜகவில் இணைந்தார். 47 வயது ஜிதின் பிரசாதா முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் பதவி வகித்தவர். உத்தரபிரதேசத்தில் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் திடீரென பாஜகவில் சேர்ந்து விட்டார். இதை காங்கிரஸ் மேலிடம் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதேநேரம் ஜோதிராதித்ய சிந்தியாவின் நண்பர் என்பதால் ஜிதின் பிரசாதாவை பாஜக எளிதில் வளைத்துப் போட்டுவிட்டது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுடன் மல்லுக்கட்டி வரும் இன்னொரு இளம் தலைவர் சச்சின் பைலட், காங்கிரசிலிருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி சுஷ்மிதா தேவ் சிங் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்து சோனியாவுக்கும், ராகுல் காந்திக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.


சட்டம் படித்துள்ள 48 வயது சுஷ்மிதா கல்லூரி பருவ காலத்தில் இருந்தே காங்கிரசில் இணைந்து செயல்பட்டு வந்தவர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசில் இருந்ததால் என்னவோ சோனியாவுடன் அவருக்கு நெருக்கம் அதிகம். கடந்த 4 ஆண்டுகளாக மகளிர் காங்கிரஸ் தலைவி பதவியையும் வகித்து வந்தார். அசாம் மாநிலத்தை சேர்ந்த சுஷ்மிதா, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் சில்சார் தொகுதியில் வெற்றி பெற்றார். ஒருமுறை அசாம் மாநில சட்டப்பேரவைக்கும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் மோகன் தேவின் மகளும் ஆவார். சந்தோஷ் மோகன் தேவ் முன்னாள் பிரதமர்கள் ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரின் அமைச்சரவைகளில் பதவி வகித்தவர்.

இவர், சில்சார் நாடாளுமன்றத் தொகுதியில் 1980 முதல் தொடர்ந்து 5 முறையும், திரிபுரா மேற்கு மக்களவை தொகுதியில் இருமுறையும் வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிட்டத்தக்கது. சுஷ்மிதாவின் குடும்பத்தினருக்கு அசாம், திரிபுரா மாநிலங்களில் பரவலாக நல்ல செல்வாக்கு இன்றும் உள்ளது. காங்கிரசிலிருந்து வெளியேறிய அடுத்த நிமிடமே சுஷ்மிதா தனது ட்விட்டர் பக்க சுய குறிப்பில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் முன்னாள் தலைவி என்று மாற்றிக் கொண்டு விட்டார். தனது ராஜினாமா கடிதத்தை, அவர் சோனியாவுக்கு அனுப்பி வைத்தார்.

அதில் தனக்கு வழிகாட்டியாக திகழ்ந்ததற்கும், உயர்பதவி வாய்ப்புகளை வழங்கியதற்கும் நன்றி தெரிவித்துள்ள சுஷ்மிதா கட்சியிலிருந்து எதற்காக விலகினார் என்ற காரணத்தை வெளிப்படையாக குறிப்பிடவில்லை. இதுதொடர்பாக தலைமை மீது, அவர் எந்த குற்றச்சாட்டையும் வைக்கவில்லை. சுஷ்மிதா காங்கிரசிலிருந்து வெளியேறியவுடன் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், டெல்லி மேல்-சபை எம்பியுமான கபில்சிபல், கவலை தெரிவித்து ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில்,”காங்கிரசிலிருந்து இளம் தலைவர்கள் வெளியேறுவதை தடுத்து, கட்சியை பலப்படுத்த நாங்கள் முயற்சி மேற்கொண்டால் எங்களை அவமானப்படுத்துகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி கண்களை மூடிக்கொண்டு செயல்படுகிறது”என்று குற்றம்சாட்டி இருக்கிறார். இப்படியே ஒவ்வொரு இளம் தலைவராக வெளியேறினால் கட்சியில் யாருமே இருக்க மாட்டார்கள் என்பதை சூசகமாக கபில்சிபல் சுட்டிக் காட்டியுள்ளார். “கட்சியின் தலைமையில் மாற்றம் வேண்டும், நிரந்தர தலைவர் ஒருவரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கவேண்டும்” என்று கடந்த ஆண்டு சோனியாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய காங்கிரஸ் தலைவர்கள் 22 பேரில் கபில்சிபலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சரி, எதற்காக காங்கிரசிலிருந்து சுஷ்மிதா வெளியேறினார்?… அதற்கு காரணம் இல்லாமல் போகுமா?… அசாம் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது.


இந்தத் தேர்தலில், அகில இந்திய ஒருங்கிணைந்த ஜனநாயக முன்னணி என்ற கட்சியுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் அந்த கட்சிக்கு 20 தொகுதிகளை வாரி வழங்கியது. அதுவும் அந்தக் கட்சி கேட்ட தொகுதிகளையெல்லாம் மறுக்காமல் ஒதுக்கியது. காங்கிரஸ் 95 தொகுதிகளில் போட்டியிட்டது. தொகுதி பங்கீட்டின்போது இதை சுஷ்மிதா கடுமையாக எதிர்த்துள்ளார். அதிக தொகுதிகளில் போட்டியிட்டாலும் கூட, நம்மால் ஆட்சி அமைக்கும் அளவிற்கு வெற்றி பெற முடியாத சூழல் ஏற்படும் என்று சோனியாவிடம், ராகுலிடமும் என்று பலமுறை எடுத்துக் கூறினார். ஆனால் அவர்கள் அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மேலிடத்துடன் மனக்கசப்பு ஏற்பட அப்போதே, சுஷ்மிதா பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அன்று அவர் அமைதியாக இருந்துவிட்டார். அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளும் அவர் கணித்த மாதிரியே அமைந்தது. 20 தொகுதிகளில் போட்டியிட்ட அகில இந்திய ஒருங்கிணைந்த ஜனநாயக முன்னணி 16 இடங்களில் வெற்றி பெற்று விட்டது. 95 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய காங்கிரசுக்கு 29 இடங்கள் மட்டுமே கிடைத்தது. பிரதான கூட்டணி கட்சி காலை வாரியதால் காங்கிரசால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. அதனால்தான் இப்போது, காங்கிரசிலிருந்து சுஷ்மிதா வெளியேறிவிட்டார் என்கிறார்கள். இதனால் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி பதவிக்கும் பொருத்தமான ஒருவரை தேர்வு செய்யவேண்டும், அசாம் மாநிலத்திலும் சுஷ்மிதாவுக்கு இணையானதொரு தலைவரை உருவாக்கவேண்டும், என்ற இரட்டைத் தலைவலி சோனியாவுக்கும், ராகுலுக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், காங்கிரசில் இருந்து விலகிய அடுத்த சில மணி நேரங்களில் சுஷ்மிதா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டார். மேற்கு வங்காளத்தின் அருகில் அசாம், திரிபுரா மாநிலங்கள் அமைந்துள்ளன. இந்த இரு மாநிலங்களிலும் தனது கட்சியை வளர்ப்பதற்காக மம்தா பானர்ஜி, சுஷ்மிதாவை தன் பக்கம் இழுத்து விட்டார். இதுகுறித்து, டெல்லியில் அரசியல் நோக்கர்கள் கூறுகையில், “சோனியாவும், ராகுலும் கட்சியை வளர்ப்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுப்பதுபோல் தெரியவில்லை. கட்சிக்கு எந்த விதத்திலும் பயனில்லாத மூத்த தலைவர்கள் பலர் வளரும் இளம் தலைவர்களுக்கு வழிவிடாமல் தடுத்து வருகிறார்கள்.

இது சோனியாவுக்கும், ராகுலுக்கும் தெரிகிறது. ஆனாலும் அந்த மூத்த தலைவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதனால் கட்சிக்குத்தான் பாதிப்பு. அசாமின் பிரபல தலைவர் சுஷ்மிதா வெளியேறி இருப்பதன் மூலம் தற்போது அந்த மாநிலத்திலும் காங்கிரஸ் பலவீனமாகிவிட்டது. இப்போது பெரிய மாநிலங்களில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் நேரடி மோதல் என்றால் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் ஆகியவற்றில் மட்டுமே உள்ளது.

இதை வைத்துக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி ஜெயிக்க முடியும்?.. அதனால்தான் தங்களது அரசியல் எதிர்காலம் கருதி வேறு கட்சிகளை தேடி இளம் தலைவர்கள் பறக்கத் தொடங்கி விட்டனர். எனவே, சுஷ்மிதாவை மம்தா பானர்ஜி வளைத்து போட்டதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை” என்று குறிப்பிட்டனர்.தேசிய கட்சியான காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலத்திலும் எதனால் தேய்ந்து வருகிறது என்ற காரணம் இப்போது புரிகிறதல்லவா?…

Views: - 256

0

0