ஆண்களைவிட அதிகமாக 5 லட்சம் ஓட்டு…! வெற்றி மகுடத்தை பெண்கள் சூட்டப்போவது யாருக்கு?

10 April 2021, 3:34 pm
Women voters - Updatenews360
Quick Share

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சமீபகாலமாக பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வாக்களிப்பதை காணமுடிகிறது. அதுவும் ஆண் வாக்காளர்களை ‘ஓவர் டேக்’ செய்யும் அளவிற்கு பெண்கள் ஒவ்வொரு தேர்தலிலும் உற்சாகத்துடன் ஓட்டு போடுகின்றனர். குறிப்பாக, நகர்ப்புறப் பெண்களைவிட கிராமங்களில் வசிக்கும் பெண்கள் பெரும்பாலும் தங்களுடைய ஜனநாயக கடமையை முடிந்த வரை நிறைவேற்றி விடுகிறார்கள்.

அதுமட்டுமல்ல, தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு முறையும் அதிகரித்தே வருகிறது. இதில் ஒரு ஆச்சரியமான உண்மை என்னவென்றால் தமிழகத்தில் ஆண், பெண் பாலின வித்தியாசம் 1000 ஆண்களுக்கு 996 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. அப்படி இருந்தும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 10 லட்சம் வரை அதிகமாக இருக்கிறது.

vote - - updatenews360

தமிழக மக்களில், 80% பேர் படிப்பறிவு பெற்றவர்கள். இதில் ஆண்களில் மட்டும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 86.77 சதவீதம். பெண்களிலோ இது 73.44 விழுக்காடுதான். அதேபோல் தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 51 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள். 49 சதவீத மக்கள் நகர்புறங்களை சார்ந்து வசிக்கின்றனர்.

இப்படி பல்வேறு காரணங்களை அலசி ஆராய்ந்து பார்த்தால் ஒரு உண்மை தெரியவருகிறது. நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில்தான் வாக்களிப்பது பற்றிய விழிப்புணர்வு அதிகம் உள்ளது. அதுவும் பெண்களிடம்தான், இந்த உணர்வு மிகுதியாக காணப்படுகிறது.

1991 முதல் நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவை தேர்தல்களை பொறுத்தவரை, 1991-ல் ஆண் வாக்காளர்கள் ஒரு கோடியே 33 லட்சம் பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு கோடியே 21 லட்சம் பேரும் வாக்களித்தனர். 1996 தேர்தலில், வாக்களித்த ஆண்கள் ஒரு கோடியே 47 லட்சம். பெண்கள் ஒரு கோடியே 36 லட்சம்.

2001 தேர்தலைப் பொறுத்தவரை, ஆண்கள் ஒரு கோடியே 46 லட்சம் பேரும், பெண்கள் ஒரு கோடியே 34 லட்சம் பேரும் ஓட்டு போட்டுள்ளனர். 2006 தேர்தலில் ஒரு கோடியே 67 லட்சம் ஆண்களும், ஒரு கோடியே 61 லட்சம் பெண்களும் வாக்களித்திருக்கிறார்கள். 2011 தேர்தலில் ஆண்-பெண் வாக்காளர்கள் இருவருமே, சரிசமமாக ஒரு கோடியே 83 லட்சம் ஓட்டு போட்டுள்ளனர்.

இதன் பிறகே பெண்களின் கை ஓங்கி இருக்கிறது. 2016 தேர்தலில் 2 கோடியே 16 லட்சம் பெண்களும் 2 கோடியே 12 லட்சம் ஆண்களும் வாக்களித்தனர். 2021 தேர்தலில், 2 கோடியே 31 லட்சம் பெண்களும், 2 கோடியே 26 லட்சம் ஆண்களும் வாக்களித்து இருக்கிறார்கள்.

tamilnadu vote - updatenews360

இந்த தேர்தலில் கிராமப்புறங்களில் பெண்களின் வாக்குகள் அதிகமாக பதிவாகி இருப்பதை அதிமுக தங்களுக்கு சாதகமாக பார்க்கிறது. அதை நம்புவதற்கும் பல காரணங்கள் உள்ளன. ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது, மகளிரிடையே குறிப்பாக கிராம பெண்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் கிராம மக்களின் வருடாந்திர தேவையே 6 சிலிண்டர்கள் என்பதாகத்தான் இருக்கும்.

இலவச வாஷிங் மெஷின், அரசு கேபிள் கட்டணம் ரத்து, அனைவருக்கும் வீடு என்ற அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளும் கிராமப்புற வாக்காளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்கியதும் அவர்களை கவர்ந்துள்ளது. அடுத்ததாக,12,100 கோடி ரூபாய் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் ஆகிய இரண்டும் டெல்டா மற்றும் பிற மாவட்டங்களில் அதிமுகவுக்கு மிகவும் சாதகமான அம்சங்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டு இருப்பதன் மூலம் தமிழக மாணவர்கள் 1,300 பேர் வரை கூடுதலாக மருத்துவ படிப்பில் சேர்வதற்கு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் ஆண்டுக்கு 700 பேர் வரை மருத்துவக் கல்லூரிகளில் மிக எளிதாக சேரும் வகையில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது, ஆண்டுக்கு 2 ஜிபி டேட்டா இலவசம் போன்றவை முதல் முறை வாக்காளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ops-eps-updatenews360

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான ஆ. ராசா இழிவாக பேசியது, கொங்கு மண்டலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெண்களிடையே திமுகவுக்கு எதிர்ப்பான மனநிலையை உருவாக்கி இருக்கிறது என்பதும் வெளிப்படை. இதுவும் அதிமுகவுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது.

திமுகவைப் பொறுத்தவரை, அதன் தேர்தல் அம்சங்கள் என எடுத்துக் கொண்டால் நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என்ற தேர்தல் வாக்குறுதி மிக சாதகமாக உள்ளது.

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த அரிசி அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய், நிவாரணத்தொகை, 5 ஆண்டுகளில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள், பட்டதாரிகள் தொழில் தொடங்க 20 லட்சம் கடன், 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கல்விக் கடனை அரசே செலுத்தும் என்பன போன்ற வாக்குறுதிகளும் வாக்காளர்களை ஈர்க்குமென திமுக நம்புகிறது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், பொள்ளாச்சி பாலியல் விவகாரம் மற்றும் நீட் தேர்வு ரத்து என்ற தேர்தல் வாக்குறுதி போன்றவையும் இந்தத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று திமுக எதிர்பார்க்கிறது. மற்றபடி திமுக நம்புவது எல்லாம் 2019 நாடாளுமன்ற தேர்தலில் கண்ட அபார வெற்றி தற்போதும் கிடைக்குமென்று கருதுவதுதான். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியில் 60% கிடைத்தால்கூட ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று திமுக கணக்குப் போடுகிறது.

DMK Stalin -Updatenews360

இதேபோல் தொடர்ந்து 10 வருடம் அதிமுக ஆட்சியில் இருந்து விட்டதால், அதன் காரணமாக வாக்காளர்களிடம் தங்களுக்கு ஆதரவான மனநிலை ஏற்பட்டிருப்பதாக திமுக நம்புகிறது.

இதுகுறித்து அரசியல் வல்லுனர்கள் சிலர் கூறும்போது, “1996 தேர்தல் தவிர பெண்களின் வாக்கு பெரும்பாலும் அதிமுக அணிக்கே கிடைத்து வந்துள்ளது.2006 தேர்தலில் கூட இலவச தொலைக்காட்சி வழங்கப்படும் என்று கருணாநிதி வெளியிட்ட அறிவிப்பால்தான், கடைசி நேரத்தில் பெண்களின் ஓட்டுகளில் சில சதவீதம் திமுகவுக்கு மாறிச் சென்றது. அந்த நிலையிலும் கூட அதிமுக கூட்டணி 69 இடங்களில் வெற்றி பெற்றது.

இதில் இன்னொரு உண்மை என்னவென்றால், கடந்த 4 சட்டப்பேரவை தேர்தல்களையும் எடுத்துக் கொண்டால் திமுக ஒருமுறைகூட மூன்று இலக்க தொகுதிகள் என்ற வெற்றியை பெற்றதில்லை. இதற்கு முக்கிய காரணம் பெண்களின் ஓட்டு திமுக கூட்டணிக்கு அதிக அளவில் கிடைக்காமல் போனதுதான்.

அதிமுக ஆட்சியின் மீது அதிருப்தி இருந்தால் குறைந்தபட்சம் 80 சதவீத ஓட்டுகள் இந்த தேர்தலில்
பதிவாகி இருக்கவேண்டும். 5 முனை போட்டி நிலவியபோதும் கூட இந்த சதவீத அளவிற்கு வாக்குகள் பதிவாகவில்லை.

நகர்ப்புறங்களை விட கிராமங்களில்தான் அதிக சதவீதத்தில் ஓட்டு பதிவாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக ஆண் வாக்காளர்களை விட 5 லட்சம் பெண்கள் கூடுதலாக இந்த தேர்தலில் ஓட்டு போட்டிருக்கிறார்கள். இது ஒட்டு மொத்த ஓட்டுப்பதிவில் ஒன்னேகால் சதவீதம் அதிகமாகும்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுடன் இந்த தேர்தலை ஒப்பிட்டுப் பார்த்தால் இன்னொரு உண்மையும் புலப்படும்.

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் திமுகவின் மெகா கூட்டணியை வீழ்த்தி 136 தொகுதிகளை கைப்பற்றியது. தற்போது பெண்களின் வாக்குகள்
கடந்த தேர்தலுக்கு இணையாக கூடுதலாக 5 லட்சம் பதிவாகி இருப்பது அதிமுகவிற்கு மிகவும் சாதகமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது” என்று அந்த அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.

2016 தேர்தல் முடிவு 2021 தேர்தலிலும் எதிரொலித்தால் அதிமுக கூட்டணி 140 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.

மக்கள் எழுதிய தீர்ப்பு என்ன என்பதை மே 2-ம் தேதி பார்ப்போம்!

Views: - 32

0

0