நாய் குட்டியை பலூனில் கட்டி பறக்கவிட்ட யூடியூபர்: லைக்குகளுக்கு ஆசைப்பட்டு கம்பி எண்ணும் நிலை…வைரலாகும் வீடியோ.!!

29 May 2021, 10:45 am
Quick Share

புதுடெல்லி: யூடியூப்பில் லைக்குகளுக்கு ஆசைப்பட்டு நாய் குட்டியை ஹீலியம் பலுனில் கட்டி பறக்க விட்ட யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடகமான யூடியூப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை பார்ப்பவர்களும், அதில் வீடியோ பதிவேற்றும் யூடியூபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. யூடியூப் சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சப்ஸ்கிரைபர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக விதவிதமான கண்டெண்ட்களை பதிவேற்றி வருகின்றனர்.

சில நேரங்களில் எல்லைமீறிய செயல்களில் ஈடுபட்டு சிக்கலையும் சந்திக்கின்றனர். அந்த வகையில் டெல்லியைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் செல்லப்பிரானியை பறக்க வைக்கும் வீடியோவை பதிவேற்றியதால் சமூக வலைத்தளங்களில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த 32 வயதாகும் கவுரவ் என்ற இளைஞர் “GauravZone” என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். 40 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் கொண்ட இவருடைய சேனலில் சமீபத்தில் ஒரு சர்ச்சை வீடியோவை கவுரவ் பதிவேற்றினார். அதில் அவர் வளர்த்து வரும் ‘டாலர்’ என்ற நாய்க் குட்டி மீது சில ஹைட்ரஜன் பலூன்களை கட்டி அதனை பறக்க வைத்திருக்கிறார்.

அவர் வசித்து வரும் பஞ்ச்ஷீல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் கார் ஒன்றின் மீது அமர்ந்துள்ள கவுரவ் அவர் வளர்த்து வரும் டாலர் எனும் நாய்குட்டியின் மீது சில ஹைட்ரஜன் பலூன்களை கட்டி அதனை கீழ்தளத்தில் இருந்து பறக்க விடுகிறார். அதே அடுக்குமாடி குடியிருப்பின் 2வது தளத்தில் உள்ள பால்கனி வரை அந்த நாய் காற்றில் பறக்கிறது. அருகில் உள்ள கவுரவின் தாயார் நாய்க்குட்டி பறப்பதால் மகிழ்ச்சியில் கை தட்டி ஆர்பரிக்கிறார்.

இந்த வீடியோவை கடந்த மே 21ம் தேதி கவுரவ் அவருடைய சேனலில் வெளியிட்ட நிலையில் சமூக வலைத்தளங்களில் கவுரவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. விலங்குகள் நல அமைப்புகளும் கவுரவின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 117

0

0