பொங்கி எழ துடிக்கும் அமராவதி.! இரு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!!

7 August 2020, 7:24 pm
Tirupur Amaravathi Warn - Updatenews360
Quick Share

திருப்பூர் : கனமழையால் அமராவதி அணை வேகமாக நிரம்பி வருவதால் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட உள்ளதால் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் அமராவதி ஆற்றின் கரையோரம் உள்ள பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளாக உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வால்பாறை கேரள மாநிலம் மூணாறு,மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை காரணமாக பாம்பாறு, சின்னாறு மற்றும் தேனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அமராவதி அணைக்கு நீர் வரத்து இன்று மதியம் 1 மணி நிலவரப்படி, வினாடிக்கு 12500 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 84.35 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர் வரத்து இருந்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி எந்நேரமும் உபரி நீர் திறந்து விடப்படும் என்பதால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை பொதுப்பணித்துறையினரால் விடப்பட்டுள்ளது.