மா அறுவடை செய்யாமல் மரங்களிலே பழுத்து அழுகும் மாம்பழங்கள்: விவசாயிகள் வேதனை…

12 June 2021, 4:56 pm
Quick Share

தருமபுரி: அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் மா அறுவடை செய்யாமல் மரங்களிலே பழுத்து அழுகும் நிலையில் இருப்பதால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் பிரதான தொழில் விவசாயம் மட்டுமே. மாவட்டத்தில் கரும்பு, மஞ்சள், மரவள்ளி கிழங்கு சிறுதானியங்கள் பயிரிட்டு வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக மா அதிக அளவில் சாகுபடி செய்யபடுகின்றன். மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பல ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்து வருகின்றனர். பாலக்கோடு, காரிமங்கலம் குறிப்பாக பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கோம்பூர் முதல் சாளூர் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் அல்போன்ஷா, பெங்களூரா, நீலம், நடுச்சாலை, செந்தூரா, ஹிமாயூதின், குதாதத், மல்கோவா, இமாமஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மா வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் இருந்து பல மாவட்டங்களுக்கு மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்கள் மற்ற மாவட்டங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கும் இங்கிருந்து மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின்பு சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீடித்து வருவதால் போக்குவரத்து இல்லாத நிலையில் மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் மாம்பழங்கள் அறுவடை செய்யாமல் மரங்களிலே மாம்பழங்கள் பழுத்து அழுகி வீணாகி வருகின்றன. அதே போல் மா அறுவடை செய்ய கூலி ஆட்கள் இல்லாததாலும் மா அறுவடை செய்ய முடியாமல் உள்ளது.

இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே கிராம அதிகாரிகள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் மூலமாக கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் பெயருக்கு ஏற்றாற்போல் கிடங்குகள் மற்றும் குளிர்சாதன கிடங்குகள் மாவட்டத்தில் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 65

0

0