15ஆவது ஆண்டு தேசிய நெல் திருவிழா தொடக்கம்: 174 வகையான பாரம்பரிய நெல் வகைகள் விவசாயிகளுக்கு வழங்கல்

Author: Udhayakumar Raman
5 August 2021, 4:29 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூரில் 15ஆவது ஆண்டு தேசிய நெல் திருவிழா தொடங்கியது. 174 வகையான பாரம்பரிய நெல் வகைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

மறைந்த நம்மாழ்வார் கடந்த 2007ஆம் ஆண்டு இந்த பாரம்பரிய நெல் திருவிழாவை தொடங்கி வைத்தார். அதனை முன்னெடுத்து நடத்தி வந்தவர் மறைந்த நெல் ஜெயராமன் ஆவார். தமிழர்கள் பாரம்பரியமாக சாகுபடி செய்து வந்த மறைந்துபோன நெல் ரகங்களை மீட்பதை இந்த நெல் திருவிழா நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.இந்த நெல் திருவிழா தொடங்கியபோது சுமார் பத்துக்கும் மேற்பட்ட மறைந்துபோன நெல் ரகங்களை கொண்டு தொடங்கப்பட்டது. தற்போது மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி, காட்டுயானம், யானைக்கவுனி, சீரக சம்பா, கருடன் சம்பா, தூயமல்லி, குள்ளக்கார் உள்ளிட்ட 174 நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டு விவசாயிகளுக்குள்ளாகவே பரிமாற்றம் செய்து வழக்கில் இருந்து மறைந்த பாரம்பரிய நெல் ரகங்கள் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கும் பரவலாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 15வது பாரம்பரிய நெல் திருவிழா திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கியுள்ளது. திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் இருந்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் பாரம்பரிய நெல் மீட்பாளர் நெல் ஜெயராமன் உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு நெல் கோட்டை வைத்து மாட்டுவண்டியில் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு விவசாயிகள் ஊர்வலமாக வந்து இத்திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். இந்த நெல் திருவிழாவில் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடியில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட விவசாயிகளும் இந்த நெல் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

பாரம்பரிய நெல் திருவிழாவில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இத்திருவிழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், டிஆர்பி ராஜா, மாரிமுத்து, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், மாநில வளர்ச்சி குழு தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், மூத்த வேளாண் அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். நெல் திருவிழாவில் பங்கேற்றவர்களுக்கு இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 174 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை அரங்கங்கள் அமைக்கப்பட்டு ஏராளமான விவசாயிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

நெல் திருவிழாவின் முக்கிய நோக்கமான இயற்கை பாரம்பரிய நெல் ரகங்கள் பங்கேற்றுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 2 கிலோ இலவசமாக வழங்கப்பட்டது. அவற்றை சாகுபடி செய்து அடுத்த ஆண்டு நான்கு கிலோவாக விவசாயிகள் திருப்பி அளிக்க உள்ளனர். இதன் மூலமாக பாரம்பரிய இயற்கை நெல் ரகங்கள் சுழற்சி முறையில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் பரவலாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 150

0

0