நிஜத்தில் அரங்கேறிய ‘முதல்வன்’ திரைப்படம்: உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வரான மாணவி..!!

24 January 2021, 12:36 pm
shrusti - updatenews360
Quick Share

உத்தரகண்ட்: தெளலத்பூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி, இன்று ஒரு நாள் முதலமைச்சராக செயல்படுகிறார்.

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார் நகருக்கு அருகிலுள்ள தெளலத்பூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி, இன்று ஒரு நாள் அம்மாநிலத்தின் முதல்வராக செயல்படுகிறார்.

உத்தரகாண்ட் மாநில வரலாற்றிலேயே முதல் பெண் முதல்வரும் இவர் தான். இவரது தந்தை ஒரு வியாபாரி. தாய் அங்கன்வாடியில் பணியாற்றுகிறார். இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இவருக்கு ஒரு நாள் முதலமைச்சராக பணியாற்ற வாய்ப்பளித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சிருஷ்டி முதல்வராக செயல்படும்போது, அம்மாநிலத்தின் முதல்வராக இருக்கும் திரிவேந்திர சிங் ராவத்தும் உடனிருப்பார். இந்த நிகழ்ச்சி இன்று மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. பெண்களின் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஏற்பாடு என உத்தராகண்ட் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் உஷா நேகி கூறியுள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தின் கெர்சாய்ன் என்கிற கோடை கால மாநில தலைநகரிலிருந்து, சிருஷ்டி இன்று உத்தராகண்ட் மாநில முதல்வராக செயல்படுவார் என்றும், அவர் பல்வேறு மாநில அரசின் திட்டங்களை பரிசீலிக்கவிருக்கிறார் என்றும் தெரிகிறது. ரூர்கியில் உள்ள பி.எஸ்.எம். பிஜி கல்லூரியில் விவசாய பாடப்பிரிவில் மூன்றாமாண்டு இளங்களை அறிவியல் படித்துக் கொண்டிருக்கும் இவர், அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், உத்தராகண்ட் மாநில சுற்றுலா துறையின் ஹோம் ஸ்டே திட்டம் போன்ற திட்டங்களை ஆய்வு செய்ய உள்ளார்.

சிருஷ்டி உத்தரகன்ட் மாநிலத்தின் குழந்தைகள் சட்டசபையில் கடந்த 2018ம் ஆண்டிலிருந்து முதல்வராக செயல்பட்டு வருகிறார். இந்த குழந்தைகள் சட்ட சபையை மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடத்தி வருகிறது.

சிருஷ்டியை ஒரு நாள் முதல்வராக பதவியேற்கச் செய்வது குறித்து உத்தராகண்ட் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், அம்மாநிலத்தின் தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். “சிருஷ்டி முதல்வராக செயல்படுவதற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளும் கெர்சாய்ன் மாநில சட்டசபைக் கட்டடத்தில் செய்யப்பட்டு வருகிறது. சிருஷ்டியும் இது தொடர்பாக எங்களோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவரின் திறனைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும்” என அந்த ஆணையத்தின் தலைவர் உஷா நேகி கூறினார்.

Views: - 0

0

0