குட்கா பொருட்களை கடத்திய இருவர் கைது: 5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

19 January 2021, 4:21 pm
Quick Share

வேலூர்: வேலூர் அருகே குட்கா பொருட்களை கடத்திய இருவரை போலீசார் கைது செய்து, 5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பெங்களூரில் இருந்து ஆற்காடுக்கு குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், ஜெகநாதன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் கிரீன் சர்க்கிள் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை மறித்து விசாரணை செய்தனர். ஆட்டோவில் இருந்தவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர். அப்போது சரக்கு ஆட்டோ டிரைவர் ஆட்டோவில் தக்காளிகள், டிரேக்கள் உள்ளதாக கூறினார். எனினும் சந்தேகம் தீராத போலீசார் சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர்.

ஆட்டோவில் ட்டிரேக்களுக்கு அடியில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் டிரைவர் மற்றும் கிளீனரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்த ஹைதர்அலி, பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பர்தான் என்பதும், இவர்கள் ஆற்காட்டுக்கு குட்கா பொருட்களை கடத்திச் சென்றது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோவுடன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு ரூ. 5 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Views: - 0

0

0