குட்கா சப்ளை செய்ய வந்த 2 பேர் கைது: 250 கிலோ குட்கா பறிமுதல்
Author: kavin kumar14 August 2021, 2:54 pm
சென்னை: கொடுங்கையூரில் குட்கா சப்ளை செய்ய வந்த 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 250 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள சில பெட்டிக் கடைகளில் குட்கா விற்கப்படுவதாக கொடுங்கையூர் போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கொடுங்கையூர் எம்.ஜி.ஆர் நகர் 7வது தெரு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் இரண்டு பேர் அந்தக் கடைக்கு குட்கா சப்ளை செய்ய வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த கொடுங்கையூர் போலீசார் அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து 20 குட்கா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் அவர்கள் மண்ணடி சிவ முத்தையா தெருவைச் சேர்ந்தவர் முகமது ஆசிக் 28 மற்றும் ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த நாகூர் மீரான் வயது 24 என்பது தெரிய வந்தது. இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மண்ணடியில் உள்ள ஒரு குடோனில் சோதனை செய்த போது அதில் 250 கிலோ குட்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
0
0