ரவுடியின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதற்காக வந்த 24 பேர் கைது

15 August 2020, 10:45 pm
Quick Share

காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் அருகே பிரபல ஏ பிளஸ் நிலை ரவுடியின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதற்காக வந்த 24 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் படப்பை குணா. இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளது .மேல்மட்டம் வரை அவருக்கு தொடர்பு உள்ளதால் எதிலும் சிக்காமல் தப்பித்துக் கொண்டு வருகின்றார். ஸ்ரீ பெரும்பத்தூர், ஒரகடம், இருங்காடுகோட்டை போன்ற பகுதியில் உள்ள ஏராளமான கம்பெனிகளில் இவர் வைப்பதுதான் சட்டம் என்ற நிலை இருந்து வருகின்றது. இதனால் இவர் ஏ ப்ளஸ் நிலையில் உள்ள ரவுடி என காவல் துறையினர் கூறுகின்றனர்.

இவரது பிறந்த நாள் விழா கடந்த பத்தாம் தேதி என ஏராளமான போஸ்டர்கள் அடித்து அனைத்து பகுதியிலும் ஒட்டப்பட்டது. காவல்துறையினருக்கு தெரியாமல் ஒன்பதாம் தேதி இரவே இவருடைய ஆதரவாளர்கள் அனைவரையும் அழைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இன்று சுதந்திர தின விழா என்ற போர்வையில் இவருடைய பிறந்த நாளை விடுபட்ட நண்பர்கள் கொண்டாட முடிவு செய்து காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் இருந்து ஏராளமான கார்களை எடுத்துக் கொண்டு பலர் மதுரமங்கலத்துக்கு வந்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றபோது சுமார் 60-க்கும் மேற்பட்டோர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். அவர்களில் 24 பேர் மட்டுமே போலீஸாரிடம் சிக்கினர். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர். அதில் 22 பேர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து அனுப்பினர். மற்ற ரெண்டு பேரும் பழைய குற்றவாளி என்பதால் சிறைக்கு அனுப்பப்பட்டனர். பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளை மீறியதாக அவர்களிடம் இருந்த 5 சொகுசு வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இந்த விழாவுக்காக 200-க்கும் மேற்பட்டோர் கூடியதாகவும், துணை நடிகை ஒருவரின் நடனம் நடைபெற்றதாகவும், அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் போலீஸார் தரப்பில் சுமார் 50-ல் இருந்து 60 பேர் மட்டுமே வந்தனர் என்றும், அவர்களில் 24 பேரை பிடித்துவிட்டோம் மற்றவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர். படப்பை குணா பல காவலர்களுக்கு அன்பளிப்பு அளிப்பதால் விசுவாசமாக அவர்கள் நடந்து கொள்கின்றார்கள் என காவல்துறையில் உள்ளவர்களே சொல்லி வேதனைப்படுகின்றனர்.

Views: - 449

0

1