பொங்கலுக்காக 2500 ரூபாய் கொடுக்கவில்லை ஓட்டுக்காக கொடுத்துள்ளது: தயாநிதிமாறன் குற்றச்சாட்டு

21 January 2021, 9:08 pm
Quick Share

திருவாரூர்: தமிழக அரசு பொங்கலுக்காக 2500 ரூபாய் கொடுக்கவில்லை ஓட்டுக்காக கொடுத்துள்ளதாக திருவாரூரில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் குற்றச்சாட்டியுள்ளார்.

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் இன்று திருவாரூர் வந்தடைந்தார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குடி பகுதியில் நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது;- எடப்பாடி பழனிசாமி, தான் இறைவன் அருளால் முதல்வர் ஆனதாக தற்போது சொல்லி வருகிறார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி கூறியிருந்தால் நாங்கள் நம்பி இருப்போம்.

சசிகலாவின் காலில் விழுந்து சசிகலாவின் அருளால் முதல்வரான பின் எடப்பாடி பழனிசாமி வரம் கொடுத்தவர் தலையில் கை வைப்பது போல சசிகலாவுக்கு துரோகம் செய்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தி நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்படவில்லை. கொரோனா விவகாரத்தில் அதிமுக அரசு கவலைப்படவில்லை. மோடியின் மத்திய அரசோ கைதட்ட சொன்னது விளக்கேற்ற சொன்னது கடையை மூடு என்றது கடையைத் திற என்றது.

அவர்கள் எண்ணம் எல்லாம் வைத்தால் குடுமி அடித்தால் மொட்டை என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளார்கள். பொங்கலுக்காக 2500 ரூபாய் கொடுக்கப்படவில்லை. ஓட்டுக்காக கொடுத்துள்ளார்கள் பெட்ரோல் கேஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி நாம் செலுத்துகிறோம். நமது பணத்தை பெற்றுக் கொண்டு 2,500 ரூபாய் கொடுக்கிறார்கள். 2500 ரூபாய் கொடுத்துவிட்டு டாஸ்மாக் கடை மூலம் பெற்றுக் கொள்வோம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் தமிழக மக்களையும் இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ளார்.


பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு மருத்துவம் பார்ப்பவர்கள் நீட்தேர்வு படிக்கவில்லை. உலகத்திலேயே தலை சிறந்த மருத்துவர்கள் தமிழக மருத்துவர்கள் தான். உயர் ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி சாமானிய மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்துள்ளது. வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு ராமதாஸ் வியாபாரம் செய்து வருகிறார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக எடப்பாடி அரசு செயல்படுகிறது.

எதிர்த்தால் பதவி பறிபோய்விடும் என்ற பயம் தான். புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை கிடைக்காமல் போகும். எல்லாவற்றிற்கும் மேலாக மத்திய அரசு புதிதாக குலக்கல்வி முறையை திணிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது அதிமுக அரசால் பத்து வருடம் ஏமாந்து விட்டோம் வரக்கூடிய தேர்தலில் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கான தேர்தல் என்றார். மக்கள் கிராமசபை கூட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

இதனை முடித்துக்கொண்டு நன்னிலம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட குடவாசல் நன்னிலம் கொல்லுமாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று நாள் முழுவதும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் பரப்புரை பயணம் மேற்கொள்கிறார் நாளை திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் பரப்புரைப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

Views: - 0

0

0