1.25 டன் எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்…

13 August 2020, 10:02 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இரு சக்கர வாகனத்தில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்கள் அதிக அளவில் விற்கப்படுவதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தது. புகார்களின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவராஜா மற்றும் போலீசார் தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே சாக்கு மூடைகளுடன் ஸ்கூட்டரில் வந்த நபரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. விசாரணையில் அவர் கிருஷ்ணராஜ புரத்தை சேர்ந்த பிரித்திவிராஜ்(வயது 22) என்பதும், இதுபோல் தூத்துக்குடியில் உள்ள பல்வேறு கடைகளுக்கும் மொத்த வியாபாரம் அடிப்படையில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி ஓம் சக்தி நகர் மற்றும் குறிஞ்சி நகர் பகுதிகளில் குடோன் அமைத்து தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருப்பதும், குறிஞ்சி நகரை சேர்ந்த மகாராஜன் மற்றும் கிருஷ்ணராஜா புரத்தை சேர்ந்த சோலையப்பன் ஆகியோருக்கு பங்கு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பிரித்திவிராஜ் கொடுத்த தகவலின் அடிப்படையில் நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் குறிஞ்சிநகர் மற்றும் ஓம்சக்தி நகர் பகுதிகளில் உள்ள குடோன்களில் 1.25 டன் எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மகாராஜன் மற்றும் சோலையப்பனை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து வியாபாரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்த 3 கார், ஒரு லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு 17 லட்சத்து 17 ஆயிரத்து 376 ரூபாய் என போலீஸ் தரபபில் கூறப்படுகிறது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா புகையிலை பொருள் விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் மூலம் 1.25 டன் எடையுள்ள 10 வகையான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் சம்பந்தப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த சில நாட்களாக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதில் 10 கிலோ அளவுக்கு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.