கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த3 பேர் பலி

5 October 2020, 8:49 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ளது சந்தூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர், மளிகை கடை வியாபாரி ராமு (58). இவருக்கு நேற்று திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது தந்தை ராமு செட்டியார் (88), தாயார் சீதாலட்சுமி (80) ஆகிய இருவருக்கும் அடுத்தடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்
மூவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்த மூவருமே இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் ஆகிய மூவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியரை சந்தித்த, கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினர் டி.செங்குட்டுவன், மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மேற்கொள்வதில், மாவட்ட நிர்வாகம் மிகவும் மெத்தனமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ள சந்தூர் கிராமத்தில் எவ்வித தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை சுகாதாரத்துறையினர் மேற்கொள்ளவில்லை என்றும் புகார் தெரிவித்தார்.

இதேபோல, திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினாலோ, சமூக இடைவெளியுடன் கிராமசபை கூட்டங்கள் நடத்தினாலோ வழக்கு தொடுக்கும் காவல்துறையினர், மற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முறையாக செயல்படுவதில்லை என்றும் அவர் கூறினார். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வருவதைச் சுட்டிக் காட்டிய அவர், உடனடியாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Views: - 36

0

0