நெல்லையில் 316 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை : ஆட்சியர் தகவல்!!

27 February 2021, 1:46 pm
Nellai Collector -Updatenews360
Quick Share

நெல்லை மாவட்டத்தில் 316 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார் .

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் அனைத்து கட்சியினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆட்சியர் விஷ்ணு தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்து ஆட்சியர் விளக்கம் அளித்துப் பேசினார்.

பின்னர் ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களிடம் கூறும்போது, நெல்லை மாவட்டத்தில் வாக்களிக்க ஏற்ற வகையில் 3319 வாக்குப்பதிவு இயந்திரம், 2506 கட்டுப்பாட்டு இயந்திரம், 2653 வாக்கு சரிபார்ப்பு இயந்திரம் தயார் நிலையில் இருப்பதாகவும், மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தமாக 13 லட்சத்து 53 ஆயிரத்து 159 வாக்காளர்கள் வாக்களிக்க 1924 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மாவட்டத்தில் 316 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் அதில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 109 வாக்குசாவடிகள் உள்ளன எனவும் கூறினார். மாவட்டம் முழுவதும் 9 ஆயிரத்து 236 பேருக்கு தேர்தல் பயிற்சி அளிக்கப்பட்டு பணியாளர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார் .

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் சார் ஆட்சியர் சிவா கிருஷ்ண மூர்த்தி,மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Views: - 2

0

0