பழிக்குப் பழியாக நடந்த கொலை வழக்கில் 4 பேர் கைது: தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு…
Author: kavin kumar20 August 2021, 5:31 pm
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பழிக்குப் பழியாக நடந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் பகுதியை சேர்ந்தவர் ஐசக் மகன் பொன்சீலன் என்ற சிங்கம் (39) என்பவர் தற்போது முத்தையாபுரம் வீரபாண்டிய நகரில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பொன்சீலன் அகரம் பகுதியில் உள்ள தவசிக்கனி என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பொன்சீலனை அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, தனிப்படை அமைத்து எதிரிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார். இது சம்பந்தமாக 4 பேரை போலிசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் ஏரல் காவல்நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,கொலையுண்ட பொன்சீலன் கடந்த 23.10.2017 அன்று முன்விரோதம் காரணமாக அகரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவரின் மகனான லெனின் என்பவரை கொலை செய்துள்ளார், இதற்கு பழி தீர்க்க பொன்சீலனால் கொலை செய்யப்பட்ட லெனின் என்பவரின் சகோதரர்களான ஜெகன், ரூபன் மற்றும் அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்தவர்களான ஜெயசீலன் மகன்களான ஜெபசிங் சாமுவேல், ஜெபஸ்டின், யோகராஜ் மகன் பெனித் நியூட்டன், வெள்ளப்பழம் மகன் மாரிமுத்து மற்றும் சுவாமியடியான் மகன் ரூபன் தேவபிச்சை ஆகியோருடன் மற்றும் சிலா சேர்ந்து பொன்சீலனை அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர் என்பதும்,
கொலை செய்து விட்டு பொன்சீலன் அணிந்திருந்த தங்க நகைகளையும் திருடி விட்டு டாடா சுமோ வாகனத்தில் தப்பி சென்றதும் தெரியவந்துள்ளது. மேற்படி தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் கொலை செய்து விட்டு தப்பிய மேற்படி குற்றவாளிகள் 7 பேரில் ஜெபசிங் சாமுவேல், பெனித் நியூட்டன், மாரிமுத்து மற்றும் ஜெபஸ்டின் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட 2 அரிவாள்கள், கொலை செய்து விட்டு திருடிய நகைகளில் 21 பவுன் தங்க நகைகள் மற்றும் டாடா சுமோ வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளோம். இதில் அகரம் பகுதியைச் சேர்ந்தவர்களான குணசேகர் மகன் பாலகிருஷ்ணன், கொடிவேல் முருகன் மகன் நவநீதன் மற்றும் சுவாமியடியான் மகன் ரூபன் தேவபிச்சை ஆகிய 3 பேர் திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இவ்வாறு தெரிவித்தார்.
0
0