தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது…

Author: kavin kumar
29 September 2021, 3:58 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் அருகாமையிலுள்ள விவேகானந்தா நகர் வாத்தியார் குளத்திற்கு அருகே மளிகை கடையிலும், அதன் எதிர்ப்புறம் உள்ள முட்புதரிலும், தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இரயில்வே ஊழியர்களும், அந்த பகுதியை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் பணியாற்றக்கூடிய விவசாயக் கூலித் தொழிலாளர்களும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த ஒரு இடத்தில் மட்டும் தினசரி சுமார் 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

திருச்சி மாநகர சரகத்துக்கு உட்பட்ட அரியமங்கலம் காவல் நிலையம், பொன்மலை காவல் நிலையம், மாவட்ட புறநகர் பகுதியில் உள்ள திருவெறும்பூர் காவல் நிலையம் ஆகியவற்றில் எல்லையின் நடுவே இந்த இடம் அமைந்துள்ளது.இப்பகுதி பொதுமக்கள் இது குறித்து காவல்துறைக்கு பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் தொடர்ந்து சாட்டுகின்றனர். தற்பொழுது ஒரு தனியார் தொலைக்காட்சியில் இது குறித்து செய்தி வெளியானதை அடுத்து பொன்மலை காவல்துறையினர் 5பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 5 நபர்கள் லாட்டரியில் தொடர்புடைய நபர்கள் யார் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Views: - 169

0

0