ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக 7,900 வழக்குகள் பதிவு: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேட்டி

16 August 2020, 2:07 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக 7,900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே ஆகஸ்ட் மாதம் முழுவதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும், தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்டு மாதம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையான இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தூத்துக்குடி குருஸ் பர்னாந்து சிக்னலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவசியமின்றி இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்தவர்களை அவர் எச்சரித்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கி அறிவுரை கூறி அனுப்பினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடைப்பிடிக்கப்படும் முழு ஊரடங்கில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 200 இடங்களில் வாகன தணிக்கை செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாநகர் பகுதியில் மட்டும் 26 இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கில் அவசியமின்றி வாகனங்களில் வருவோர் மீது வழக்குப்பதிவு, அபராதம் விதித்தல் போன்ற சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை ஊரடங்கை மீறியதாக 7900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 58 வாகனங்கள் மட்டுமே தற்போது காவல்நிலையத்தில் வழக்குக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் 25 கிலோ கஞ்சா பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முத்தையா புரம் பாரதிநகர் அருகே திருநங்கைகள் பாலியல் தொழிலுக்கு அழைப்பது குறித்து வந்த புகாரின் அடிப்படையில் திருநங்கைகள் – போலீசார் இடையே கமிட்டி அமைக்கப்பட்டு தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.