புரெவி புயலில் இருந்து மக்களை மீட்க 82 முகாம்கள் தயார்: குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் பேட்டி

1 December 2020, 3:34 pm
Quick Share

கன்னியாகுமரி: புரெவி புயலில் இருந்து மக்களை மீட்க 82 முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

புரெவி புயல் எச்சரிக்கை குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இன்று நாகர்கோவிலில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது;- வங்க கடலில் உருவாக்கி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சிறப்பு அவசரகால கட்டுப்பாட்டு மையம் செயல்பட துவங்கி உள்ளது, அதன் படி 1077 என்ற எண்ணில் பொதுமக்கள் புயல் பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கலாம். புயல் மற்றும் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாத்து பாதுகாப்பான பகுதியில் தங்க வைப்பதற்காக மாவட்டம் முழுவதும் 82 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் 76 பகுதிகள் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் என கண்டறியப்பட்டு அங்கு 91 அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பிற்காக சுமார் 6 ஆயிரம் மணல் மூட்டைகள் அடுக்கி தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மீனவ கிராமங்களில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் புயல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது, அதன் அடிப்படையில் ஆழ்கடலில் மீன்பிடி தொழில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு மீனவ அமைப்புகளுடன் இணைந்து தகவல் தெரிவித்து கரை திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள பேசிப்பாறை , பெருஞ்சாணி ,சிற்றார் 1,2 உள்ளிட்ட முக்கிய அணைகளில் தற்போது போதிய அளவு நீர் இருக்கும் நிலையில் வரும் நாட்களில் பெய்யும் மழை அளவை பொறுத்து அணைகளில் இருந்து நீர் திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். புயலை எதிர்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 0

0

0