அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி: தலைமறைவான தம்பதியினருக்கு போலீசார் வலை…

29 August 2020, 6:08 pm
Quick Share

புதுச்சேரி: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 23 சவரன் தங்க நகை மற்றும் 9 லட்சம் பண மோசடியில் ஈடுப்பட்டு மாயமான கணவன், மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, காமராஜ் நகர் கப்பூர் தெருவை சேர்ந்தவர் முத்து. லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கரையாம்புத்துரை சேர்ந்த கண்ணன் – சரண்யா தம்பதியினர் வாடகைக்கு கூடியிருந்தனர். இதில் கண்ணன் புதுச்சேரி சட்டபேரவையில் தின கூலி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டின் உரிமையாளரான முத்துவின் மருமகளுக்கு அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 9.45 லட்சத்தை வாங்கி உள்ளார்.

அதே போல் முத்துவின் மனைவியிடம் கண்ணனின் மனைவி சரன்யா சுபநிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி 23 சவரன் தங்க நகைகளை வாங்கி அடகு வைத்துள்ளார். இதனிடையே பணத்தையும் நகையையும் வீட்டின் உரிமையாளரான முத்து, கண்ணனிடம் திருப்பி கேட்ட போது, கண்ணன் – சரண்யா தம்பதினர் பணத்தையும் திருப்பி தர மறுத்துள்ளனர். இதனை அடுத்து தனது குடும்பத்துடன் கண்ணன் தலைமறைவு ஆனார்.

இது குறித்து வீட்டின் உரிமையாளரான முத்து பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை அடுத்து கண்ணன், அவரது மனைவி சரண்யா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தம்பதியினரை தேடி வருகின்றனர்.