பிறந்து சில மணித்துளிகளில் கேட்பாரற்று கிடந்த பெண் சிசு…

8 September 2020, 4:24 pm
Quick Share

தருமபுரி: கெளப்பாறை கிராமத்தில் காளியம்மன் கோவில் அருகே பிறந்து சில மணித்துளிகளில் கேட்பாரற்று கிடந்த பெண் சிசுவை மீட்டு அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கொளப்பாறை கிராமத்தில் அரூர் கீரைப்பட்டி இடையேயான சாலையின் ஓரத்தில் காளியம்மன் கோயில் ஒன்று உள்ளது. கோயில் அருகே குழந்தை அழும் சத்தம் கேட்டு அருகில் இருந்த அக்கிராமத்தைச் சேர்ந்த ஜனனி என்பவர் ஓடிச் சென்று பார்த்துள்ளார் அப்போது பிறந்த சில மணித்துளிளே ஆன தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் இருந்த பெண் சிசு கிடப்பதை பார்த்துள்ளார். இதனை அடுத்து ஜனனி அரூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.‌

தகவலறிந்த அரூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதையன் தலைமையில் இரண்டாம் நிலைக் காவலர் சாமிதுரை, கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் பாபு ஆகியோர் விரைந்து சென்று அக்குழந்தையை மீட்டு அருகிலிருந்த கீரைப்பட்டி ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அக்குழந்தைக்கு அங்கே முதலுதவி அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து அரூர் உதவி காவல் ஆய்வாளர் மாதையன் கூறியதாவது குழந்தை தற்போது நலமாக உள்ளது எனவும், குழந்தையை தர்மபுரியில் உள்ள அரசு தொட்டில் காப்பகத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும், மேலும் குழந்தை வீசிச் சென்றது யார்..?? என்பதைப்பற்றி தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.

Views: - 5

0

0