சக நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் சேற்றில் சிக்கி பலி: 3 மணி நேரம் போராடி உடல் மீட்பு

Author: Udayaraman
4 August 2021, 8:57 pm
Quick Share

சென்னை: வியாசர்பாடி அருகே கோவில் குளத்தில் சக நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 54 வது பிளாக்கை சேர்ந்தவர் ராஜேந்திரன் ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சசிகலா நாட்டு மருந்து கடையில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூன்றாவது மகன் ராகுல் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பெற்றோர்கள்  வேலைக்குச் சென்று விட்ட பிறகு வீட்டில் தனியாக இருந்த மகன் ராகுல் நண்பர்களுடன் சேர்ந்து வியாசர்பாடி சாமியார் தோட்டம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த கோயில் குளத்தில் குளிக்கச் செல்வது வழக்கம்.

அது போல் தனது நண்பர்களுடன் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். குளிக்கும் போது தீடிரென ராகுல் மாயம் ஆனார். இதனால் உடன் குளித்துக் கொண்டிருந்த நண்பர்கள் பயந்து போய் அனைவரும் தங்களது வீட்டிற்கு சென்று விட்டனர். இது குறித்து யாரிடமும்  கூறவில்லை. வெகு நேரமாகியும் வீட்டிற்கு ராகுல் வராததால் பெற்றோர்கள் அங்குமிங்கும் தேடி உள்ளனர்.  பின்னர் ராகுலின் நண்பர்களிடம் சென்று விசாரித்த போது அதில் ஒருவன் மட்டும் நடந்ததைக் கூறியுள்ளார் .

பின்னர் அங்கு சென்று தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். வியாசர்பாடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குளத்தில் 3 மணி நேரம் தேடி சேற்றில் சிக்கி இருந்த ராகுலை பிணமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 54

0

0