கிராம நிர்வாக அலுவலர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்

16 September 2020, 9:59 pm
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலர்கள் வருடம் ஒருமுறை பணி மாறுதல் கலந்தாய்வின் மூலம் பணி இடம் மாறுதல் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வருவாய் வட்டங்களில் ஒரு வருடத்திற்கு மட்டும் இரண்டு வருடம் ஆகியும் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த மாதம் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

பின்னர் கோட்டாட்சியர் அவர்களின் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடத்தப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததன் பேரில் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் இரண்டு வாரங்கள் கழித்தும் எந்தவித பணி மாறுதல் கலந்தாய்வும் நடத்தப்படாததை கண்டித்தும், உடனடியாக பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த கோரியும், வட்டாட்சியர் அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 31 நபர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு நடக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்தனர்.