கல்குவாரி நீரில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி: பல மணி நேர போராட்டத்திற்கு பின் உடல் மீட்பு

Author: Udhayakumar Raman
26 September 2021, 5:57 pm
Quick Share

திண்டுக்கல்: கொடைரோடு அருகே கல்குவாரி நீரில் மீன் பிடிக்க சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் சடலத்தை தீயணைப்புத்துறையினரின் பல மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ஜல்லிப்பட்டி பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கிவரும் கல்குவாரியின் மையப்பகுதியில் மிகவும் ஆழமாக சுமார் 500 மீட்டர் சுற்றளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது இந்த நீரில் அப்பகுதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் துவைப்பதற்கு குளிப்பதற்கும் மற்றும் ஆடு மாடு மேய்ப்பவர்கள் மீன்பிடிக்க வருபவர்கள் நீச்சலடிக்க வரும் மாணவர்கள் என ஆண்டுதோறும் உயிர் பலியாவது வழக்கமாகி வருகிறது இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் இந்த குவாரி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று செம்பட்டி அருகே உள்ள கூலம்பட்டியைச் சேர்ந்த மூர்த்தி மகன் கருப்பையா (25) மற்றும் அவரது நண்பர்கள் அதிகாலை 6 மணிக்கே மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். எதிர்பாராத விதமாக கருப்பையா ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்ட நண்பர்கள் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளனர்.

மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நிலக்கோட்டை தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் கருப்பையாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முகலெட்சுமி வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். கருப்பையாவின் உடலை கான கல்குவாரியில் குவிந்த உறவினர்கள் கதறி அழுத காட்சி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் செம்பட்டி – கொடைரோடு முக்கிய சாலையோரம் திறந்தவெளியாக காணப்படும் இந்த ஆலமான கல்குவாரி நீரில் ஆண்டுதோறும் பலர் இறக்கும் சம்பவம் தொடர்கதையாகி உள்ளதால், இந்த கல் குவாரியை மூடி சுற்றி வேலி அமைத்து சீல் வைத்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Views: - 120

0

1