மாணவர்களுக்கு வழங்க வேண்டிய உலர் உணவுப்பொருட்களில் முறைகேடு: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை

14 July 2021, 2:57 pm
Quick Share

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ளது திருப்புலிவனம். இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 600 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சத்துணவு உட்கொண்டு வருகின்றனர்.கடந்த அதிமுக ஆட்சியின்போது கொரோனா தாக்கத்திலிருந்து மாணவ மாணவிகளை காக்கும் விதத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கியதுடன், மாதமொன்றுக்கு ஒரு மாணவருக்கு ஒரு கிலோ பருப்பு ,நாலரை கிலோ அரிசி ,பத்து முட்டை மாணவர்களுக்கு வழங்க உத்தரவிட்டது .அதற்கான நிதியையும் அப்போதைய அரசு ஒதுக்கியது.

இந்த நிலையில் திருப்புலிவனம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகளின் குடும்பத்தார் கொரோனாவல் வேலை இழந்து தவித்து வந்த நிலையில் இந்த உலர் சத்துணவு பொருள்கள் மாணவ மாணவிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.ஆனால் இந்தப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் மேல்நிலைக்கல்வி ஆசிரியர்களுக்கும் ஈகோ பிரச்சனை ஏற்பட்டதால் சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவ மாணவிகளை செல்பேசியில் யார் அழைப்பது, உலர் தானியங்களை யார் அளிக்கப்பது என வாக்குவாதம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் அவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்தது.

பட்டதாரி ஆசிரியர்கள் பெரியோர்களா, மேல்நிலை கல்வி பட்டதாரி ஆசிரியர்கள் உயர்ந்தவர்களா என்ற போட்டியில் பல மாணவ மாணவியர்களுக்கு உலர் சத்துணவுகள் பொருட்கள் அளிப்பது தொடர்பான தகவல் கொடுக்காமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அரிசி, பருப்பு, முட்டை ஆகியவற்றை ஏராளமான மாணவ, மாணவிகள் வாங்காமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் அப்பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியை பூங்கொடி, சத்துணவு அமைப்பாளர் சுந்தரவடிவேல் ஆகியோரிடம் கேட்டதற்கு அனைத்து மாணவர்களுக்கும் சத்துணவு பொருட்கள் வழங்கி விட்டதாக சில ஆவணங்களை காட்டி உள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த நமது செய்தியாளர் அந்தப் பள்ளிக்கு சென்ற போது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பூங்கொடி மற்றும் சத்துணவு அமைப்பாளர் சுந்தரவடிவேலு ஆகியோர் சில ஆவணங்களை காண்பித்தனர். அதில் கடந்த பல்வேறு மாதங்களில் மாணவ மாணவிகளுக்கு உணவுப்பொருட்கள் முழுவதும் வழங்கபடவில்லை என்பதற்கான விவரங்கள் தெரிய வந்தது. மேலும் இந்த ஆவணங்கள் அரசு வழங்கிய பதிவேட்டில் இல்லாமல் சாதாரண நோட்டு புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. மேலும் பல மாணவர்களின் கையெழுத்துக்களை இவர்களே போட்டது போல வித்தியாசம் தெரிய வந்தது.

அந்த நோட்டுப் புத்தகத்தில் கூட ஒரு மாதத்தில் எவ்வளவு பொருட்கள் அளித்தோம் எத்தனை மாணவ மாணவிகளுக்கு அளித்தோம் என்ற விளக்கக் முடிவு குறிப்புகள் இல்லை ,பொறுப்பு தலைமை ஆசிரியரின் கையொப்பமும் இல்லை. அந்த ஆவணங்களை நாம் நமது வீடியோவில் பதிவு செய்து உள்ளோம். வருகை பதிவேடு ,சத்துணவு பதிவேடு போன்ற அந்த பதிவேடு புத்தகத்தில் ஒரு காலத்தை கூட இவர்கள் எழுதவில்லை என்பது ஒரு வெட்கப்படக் கூடிய செயலாகும். இது குறித்து அவர்களிடம் கேள்வி எழுப்பிய பொழுது அவர்கள் முறையாக எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் இங்கு முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆறு மாத காலமாக நிரந்தரமான தலைமை ஆசிரியர் இல்லாத காரணத்தினால் பொறுப்பு தலைமை ஆசிரியர் பூங்கொடி ஆசிரியர்களுடன் சண்டை போட முடியாமல் எல்லாத்துக்கும் அட்ஜஸ்ட் செய்து கொண்டு செல்கிறார் என கூறப்படுகிறது. ஊரடங்கு காலக்கட்டத்தில் சத்துணவு இல்லாமல் வறுமையில் வாடும் மாணவ-மாணவிகள் பசியில்லாமல் இருக்க வேண்டுமென தான் அதிமுக அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்தியது. திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து இந்த சத்துணவு பொருட்கள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாணவ மாணவிகளுக்கு வழங்க வேண்டிய அரிசி பருப்பு முட்டை ஆகியவை என்னவானது என்றும் கேள்வி எழுந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் சத்துணவு அமைப்பாளரான சுந்தர வடிவேல் உத்திரமேரூர் பகுதியில் அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பள்ளியில் ஏற்பட்ட முறைகேடு போல் பல பள்ளிகளில் இதுபோன்ற முறைகேடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என சமூக ஆர்வலர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் இப்பள்ளியை ஆய்வுசெய்து முறைகேடுகளை கண்டறிந்து, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 46

0

0