தீயணைப்புத்துறை அலுவலகத்தில் அதிரடி சோதனை: கணக்கில் வராத ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

Author: kavin kumar
5 October 2021, 3:33 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, மாவட்ட தீயணைப்புத் துறை உதவி அலுவலரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை  போலீசார் இன்று திடீர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி விழுப்புரம் டாஸ்மாக் மேலாளர் அலுவலகம்,  ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலகம், கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலகம், ஓசூர் போக்குவரத்து சோதனைச் சாவடி, நாகர்கோயில் வட்டார போக்குவரத்து அலுவலகம், நாகை, திருவண்ணாமலை, திருவான்மியூர், அரியலூர், பெண்ணாடம், சிவகங்கை என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில்  நெற்று திருவாரூர் நேதாஜி சாலையில் உள்ள மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நந்தகோபால் தலைமையில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் முருகேசனிடம் கணக்கில் வராத ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த அலுவலகத்தில் வெடி கடை மருத்துவமனை கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு சான்றிதழ் மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலகத்தில்தான் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்கான தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு சான்றிதழ் வழங்குவதற்காக பல நபர்களிடமிருந்து பணம் வாங்கப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை அடுத்து நெற்று இரவு 8 மணிக்கு திருவாரூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் ஆய்வாளர்கள் தமிழ்செல்வி, சித்ரா மற்றும் காவல் துறையினர் அதிரடியாக மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் அலுவலகத்தில் புகுந்தனர்.

இதனையடுத்து அந்த அலுவலகத்தில் கதவுகள் அடைக்கப்பட்டு, உள்ளே இருந்தவர்கள் யாரும் வெளியில் அனுமதிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து அங்கிருந்த அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய தீவிர சோதனையில் மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் முருகேசனிடம் உரிய கணக்கில் வராத  ஒரு லட்சத்தி இருபதாயிரம் ரூபாய் ரொக்கமாக சிக்கியது. இந்தப் பணம்  யாரிடமிருந்து பெறப்பட்டது என தீயணைப்பு துறை அதிகாரியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணை இரவு தொடங்கி விடியற்காலை வெகுநேரம் வரை தொடர்ந்து நீடித்தது. திருவாரூர் மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனை பரபரப்பினை ஏற்படுத்தியது.

Views: - 181

0

0