ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் மதிவேந்தன் பேட்டி

Author: kavin kumar
12 October 2021, 1:36 pm
Quick Share

தருமபுரி: ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக செல்லும் காவிரி ஆறு பல அருவிகளாக ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், இது தென்னிந்தியாவின் நயாகரா என அழைக்கப்படுகிறது. மிகப்பிரபலமான இந்த சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் பரிலில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் அங்கிருந்த சுற்றுலா பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அதனையடுத்து ஐந்தருவி, ஆண்கள் குளிக்கும் மெயின் அருவி, தொங்கு பாலம், சமையல் கூடம் உள்ளிட்டவற்றை கொட்டும் மழையிலும் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் சிறப்புமிக்க சுற்றுலாத்தலமாக ஒகேனக்கல் விளங்கிவருகிறது. கொரோனா காலத்திற்கு முன்பு சுமார் ஒரு கோடி சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வந்துள்ளனர். தற்போது குறுகிய காலத்தில் பதினோரு லட்சம் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வந்து சென்றுள்ளனர். ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம் ஆந்திரம் கேரளம் புதுவை மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தமிழ் நாட்டுக்கு கிடைத்த ஒரு பெருமையாக ஒகேனக்கல் விளங்கி வருகிறது. ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை மேம்படுத்த திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டு சுற்றுலா தளத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் மேற்கொள்ளப்படும். ஒகேனக்கலில் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான தங்கும் விடுதி மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறிய அவர், விடுமுறை தினங்களில் ஆயிரக்கணக்கில் வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் வனத் துறை பூங்கா, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் பராமரித்தல், அருவியின் அழகை காண கண்காணிப்புக் கோபுரம் அமைத்தல், சினி அருவியில் அனைவரும் சென்று நீராடும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தல், ஒகேனக்கல்லில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான கழிப்பிட வசதிகள், ஆடைமாற்றும் அறையில் ஆயில் மசாஜ் செய்யும் இடம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை தேவைகளை மேம்படுத்துவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறிய அவர், கொரோனா பரவல் காரணமாக அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வருடன் விரைவில் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். சுற்றுலாத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு சுற்றுலா தலங்களை மேம்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் அடிப்படையில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு தனி கவனம் அளிக்கப்பட்டு மேம்படுத்தப்படும். என கூறினார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. செந்தில்குமார், திமுக மேற்கு மாவட்ட பொருப்பாளர் இன்பசேகரன், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Views: - 195

0

0