தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி திட்டங்களை விரைவில் வழங்க நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி…

6 July 2021, 6:31 pm
Quick Share

தருமபுரி: கடந்த அதிமுக ஆட்சியில் மூன்று ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி திட்டங்களை விரைவில் வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என தருமபுரியில் தமிழக சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

தருமபுரியில், இன்று சமூகநலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சி தலைவர் திவ்யதர்சினி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 130 பயணாளிகளுக்கு 32.5 இலட்சம் நிதி உதவியும், 47.684 இலட்சம் 130 பவுன் தங்கமும் அதே போல் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 பயணாளிகளுக்கு 44 ஆயிரத்து 740 ரூபாய் மதிப்பிலான 10 தையல் இயந்திரமும், அதே போல் திருநங்கைகளுக்கு புதியதாக நலவாரிய அடையாள அட்டையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் சரியாக செயல்பாடாமல் இருந்துள்ளது. தற்போது இந்த திட்டத்திற்கு 2 ஆயிரத்து 23 கோடி ரூபாய் இருந்தால் தான் இந்த திட்டம் செயல்பட முடியும் என்கிற நிலை உள்ளது. 4 கிராம் என்பதை 8 கிராம் என உயர்த்தினாலும், கடந்த மூன்று ஆண்டுகளாக திட்டம் செயல்படுத்ததால், பெண்கள் சிரமத்திற்குள்ளானார்கள் என்றும், தற்போது டிசம்பர் 2018 வரை தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் உரிய நிதி உதவிகளும், தங்கமும் வழங்கப்பட்டது. மீதமுள்ள பெண்களுக்கு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் பெண்குழந்தைகளின் திருமணத்தை கடந்த ஜூன் வரை 35 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தும் வகையில், கிராம குழு அமைக்க உத்திரவிடப்பட்டுள்ளது. இந்த விசியத்தில் தமிழக அரசு தனி கவனம் செலுத்தி இரும்பு கரம் கொண்டு தடுக்கப்படும் என கூறிய அவர் தருமபுரியில் சில ஆண்டுகளா செயல்படாத இருந்த தொட்டில்குழந்தை வரவேற்ப்பு மையம் விரைவில் மீண்டும் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெண்குழந்தைகளுக்கு அரசு வழங்கிய வைப்பு நிதி பத்திரம் முதிர்வடைந்தும் பணம் திருப்பி வழங்காமல் உள்ளது. இதனை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

முன்னதாக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில், புதியதாக 48 இலட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சுகி ஒருங்கிணைந்த மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்க ஆலோசனை வழங்கும் மையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார். பாலக்கோடு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பகழன் மற்றும் அதிமுக, பாமக சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Views: - 127

0

0