ஒகேனக்கல்லில் தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஆய்வு

Author: Udhayakumar Raman
27 June 2021, 5:28 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியரும், மாவட்ட திட்ட இயக்குனருமான மருத்துவர் இரா. வைத்தியநாதன் ஒகேனக்கல்லில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத்தலமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் திகழ்ந்து வருகிறது. கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து இயற்கை அழகை ரசித்தும், அருவிகளில் குளித்தும், பரிசல் பயணம் செய்து மகிழ்வது வழக்கம். இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஒகேனக்கல் சுற்றுலா தளம் மூடப்பட்டுள்ளது. மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கலில் மெயின் அருவி, சினி பால்ஸ் போன்ற பகுதிகள் பழுதடைந்து உள்ளது. இப்பகுதிகளையும் மேலும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று பகுதிகளை மாவட்ட கூடுதல் ஆட்சியர் மருத்துவர் வைத்தியநாதன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஒகேனக்கலில் பழுதடைந்த பகுதிகளை சீர் செய்வது, சுற்றுலா தளத்தை மேம்படுத்துவது குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ஒகேனக்கல் கூட்டு திட்ட பொறியாளர் சங்கரன், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

அதே போல் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் கர்நாடக அணைகளுக்கு நீர் அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கபிணி அணையில் இருந்து 3,000 கனஅடி உபரி நீரும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 6,136 கன அடி நீர் என கர்நாடக அணைகளிலிருந்து விநாடிக்கு மொத்தம் 9 ஆயிரத்து 136 கன அடி உபரி நீர் தமிழகத்திற்கு காவிரி ஆறு வழியாக வெளியேற்றப்பட்டது.

இதனால் தமிழக எல்லைப்பகுதியான பிலிகூண்டுலுவில் நேற்று விநாடிக்கு 5000 கன அடியாக இருந்த நீர் வரத்து, தற்போது நிலவரப்படி விநாடிக்கு 7,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகின்றன.

Views: - 194

0

0