விஜயதசமியையொட்டி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை

Author: kavin kumar
15 October 2021, 6:28 pm
Quick Share

திருச்சி: விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் எழுத வைத்து பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.

சரஸ்வதி பூஜை தினத்தின் மறுநாள் விஜயதசமி தினத்தன்று குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் சிறந்த கல்வியை தடையின்றி பெற முடியும் என்கிற நம்பிக்கை பொதுவாக பெற்றோர்களிடம் உள்ளது. இதற்காகவே கல்வி ஆண்டு தொடக்கமான ஜூன் மாதம் பள்ளியில் சேர்ப்பதற்குரிய வயதை எட்டி இருந்தாலும் தங்கள் குழந்தைகளை விஜயதசமி தினம் வரும் வரை காத்திருக்க வைப்பது வழக்கமாக உள்ளது. இருப்பினும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தாண்டு பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது.இந்த நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி 1-ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதனை தொடர்ந்து விஜயதசமியான இன்று பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியிலுள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் பெற்றோர்கள் குழந்தைகளை சேர்க்க அழைத்து வந்தனர்.அவர்களை ஆசிரியர்கள் அன்போடு வரவேற்று வித்யாரம்பம் எனும் முறையில் இறைவனை துதித்து குழந்தையின் கையை பிடித்து நெற்மணிகளில் தமிழ் மொழியின் முதல் எழுத்தான ‘அ ‘ என்ற எழுத்தை எழுத வைத்து பள்ளியில் சேர்த்தனர்.பின்னர் பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகளை ஆசிரியர்கள் வழங்கினர்.

Views: - 170

0

0