மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சட்டமன்ற உறுப்பினர்: அனைத்து மக்களுக்கும் கொரோனா நிதி வழங்க வலியுறுத்தல்

28 August 2020, 6:30 pm
Quick Share

புதுச்சேரி: பகுதிவாரியாக ஊரடங்கு அமல் படுத்துவதற்கு முன் அனைத்து மக்களுக்கும் கொரோனா நிதி வழங்க வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அதிகமாக தொற்று கண்டறியப்பட்டுள்ள 32 பகுதிகளில் வரும் 31ஆம் தேதி முதல் செம்பம்பர் 6 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் நேற்று அறிவித்தார். இதனை அடுத்து புதுச்சேரி மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்காமல் இருக்கும் காங்கிரஸ் அரசு தற்போது தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் பல்வேறு பகுதிகளை கட்டுப்படுத்த பகுதிகளாக அறிவித்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையை கண்டித்தும்,

மாவட்ட ஆட்சியரின் பகுதிவாரியான ஊரடங்கு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிமுக சட்டமன்ற கொறடா வையாபுரி மணிகண்டன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆட்சியர் அலுவலகம் வாயலில் தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினரை பேச்சுவார்த்தைக்கு தன் அறைக்கு வருமாறு அழைத்தார். இதனை தொடர்ந்து ஆட்சியருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் செய்தியாளராகப் சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன், கொரோனா அதிகம் பரவுவதால் இந்த 32 பகுதிகளுக்கும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதாகவும்,

இது குறித்து முதலமைச்சர் உடன் கலந்து ஆலோசித்து விட்டு தமக்கு உரிய பதில் அளிப்பதாக ஆட்சியர் தெரிவித்ததாக கூறிய அவர், முதலமைச்சர் சட்டபேரவையில் அறிவித்தது போல் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை இதுவரை யாருக்கும் வழங்கவில்லை என்றும், அரசு அனைத்து புதுச்சேரி மக்களுக்கும் உரிய நிவாரணம் மற்றும் கொரோனா நிதி வழங்கிய பின் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என முதலமைச்சரை தாம் வலியுறுத்துவதாக கூறினார்.