மார்க்கெட் பகுதியை இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசனை: மாவட்ட ஆட்சியர் பேட்டி

7 May 2021, 5:33 pm
Quick Share

நீலகிரி: அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் குவிந்து வருவதைக் கருத்தில் கொண்டு உதகை மார்க்கெட் பகுதியை சுழற்சி முறையிலோ அல்லது இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறினார்..

புதிய ஊரடங்கு காரணமாக காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மளிகை கடைகள் காய்கறி கடைகள் திறந்திருக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக உதகை மார்க்கெட் பகுதியில் அதிகாலை முதலே பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.மேலும் மார்க்கெட் வரும் பொதுமக்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் கூட்டம் கூட்டமாக வந்து செல்வதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உதகை மார்க்கெட் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, 12 மணிக்கு மேலும் சுற்றித்திரிந்த பொதுமக்களை சுற்றித்திரிய வேண்டாமென கூறினார்.மேலும் தேவையில்லாமல் அதிக அளவில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில், எந்த தேவைகளுக்காக சென்று வருகின்றனர் என கேட்டறிந்து, நாளை முதல் 12 மணிக்கு மேல் சுற்றித் திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

குறிப்பாக மார்க்கெட் பகுதியில் பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் குவிந்து வருவதால் சுழற்சி முறையில் கடைகளை திறப்பது குறித்தும் அல்லது அவர்களுக்கு தேவையான மாற்று இடம் வழங்க ஆலோசனை நடத்திய பின் முடிவு எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Views: - 46

0

0