பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் 68 வருவாய் கிராமங்கள் புறக்கணிப்பு….

14 August 2020, 8:05 pm
Quick Share

திருவாரூர்: பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் கடந்த 2019 20 ம் நிதியாண்டில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 68 வருவாய் கிராமங்கள் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மழை வெள்ளம் வறட்சி போன்ற இயற்கை பேரிடர் மற்றும் நோய் தாக்குதலுக்கு பயிர்கள் உள்ளாகும் போது அதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பயிர் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டமானது பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டமாக AICIL பயிர் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 543 வருவாய் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு பயிர்க்காப்பீடு செலுத்தப்பட்டுள்ளது. பயிர் அறுவடை முடிந்து மூன்று மாத காலத்துக்குள் பயிர் காப்பீடு இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில் தற்போது இதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி வேளாண் கோட்டத்தில் 31, கோட்டூர் வேளாண் கோட்டத்தில் 21, முத்துப்பேட்டை 3 திருத்துறைப்பூண்டி 4 திருவாரூர் 4 நன்னிலம் 2 கொரடாச்சேரி 1 நீடாமங்கலம் 2சேர்த்து 68 வருவாய் கிராமங்கள் முற்றிலும் பயிர் காப்பீடு வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுவதாக பயிர் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து வேளாண் துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்று முற்றிலும் விடுபடுவதற்கு வாய்ப்பு இல்லை என வேளாண் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பயிர் காப்பீட்டு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனிடையே திருவாரூர் மாவட்டத்தில் 68 கிராமங்கள் முற்றிலும் புறக்கணிக்க பட்டுள்ளதாக தகவல்கள் விவசாயிகள் மத்தியில் பரவியுள்ளது இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவகுமார் கூறியதாவது:- திருவாரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் கணக்கெடுப்பு செய்யப்பட்டதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. அனைத்து விவசாயிகளுக்கும் விடுபடாமல் பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Views: - 13

0

0