வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என அறிவிக்கவில்லை: பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை பேட்டி

12 January 2021, 11:29 pm
Quick Share

திருப்பூர்: விவசாயிகளின் போராட்டத்துக்கு விரைவில் முடிவு காண வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தற்காலிக தடைவிதித்துள்ளதாகவும், மற்றபடி திட்டத்தை விவசாயிகளுக்கு எதிரானது என அறிவிக்கவில்லை என பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் எலுகாம்வலசு,பொன்னிவாடி கிராமங்களில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நாட்டுக்கு நலம் பயக்கும் திட்டங்கள் கொள்கைகளை விளக்கம் பொதுக்கூட்டம் பாஜக மாவட்டத் தலைவர் பொன் உருத்திரகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கார்வேந்தன் முன்னிலை வகித்தார். தாராபுரம் நகர ஒன்றிய பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாதுரை கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி காலத்தில் நாட்டு மக்களுக்காக 191 திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

மாநில அரசு கொடுக்கும் நலத்திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசு மூலம்தான் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதனை மாநில அரசு வாங்கி வழங்குகிறது. அவ்வளவுதான் உதாரணத்திற்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் கூட மத்திய அரசின் நலத்திட்ட உதவி தானே தவிர மாநில அரசு அதை வாங்கித்தான் வழங்குகிறது. இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வளவு நல்ல ஒரு மனிதரை நீங்கள் எந்த காலத்திலும் மறந்து விடக்கூடாது. பாஜகவை பொறுத்தவரை மதத்தை வைத்து ஜாதியை வைத்து அரசியல் செய்யும் கட்சி கிடையாது என்பதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒரு முடிவைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக தான் இந்த வேளாண் திருத்தச் சட்டங்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தற்காலிகமாக தடை விதித்துள்ளார்கள். தவிர இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று எந்த இடத்திலும் அவர்கள் கூறவில்லை. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வு செழிக்குமே தவிர எந்த இடத்திலும் பாதிப்புகள் வராது என்று அவர் கூறினார்.

Views: - 6

0

0